பூசா சிறைச்சாலையில் 100 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 100 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக நபர்கள் உட்பட கைதிகளிடம் இருந்து இந்தத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறைகளுக்குள் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தக் கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
தொலைபேசி பாகங்கள் கண்டுபிடிப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும் 'சமிந்து தில்ஷான்' என்பவரின் அறையில் இருந்தும் கையடக்கத் தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 'குருல்லா' என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர் அமில ஹிருஷ்லாலின் அறையில், சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் உள்ள ஒரு குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நௌஃபர் மௌலவியின் அறையில் இருந்து இரண்டு கம்பித் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோதனையின் போது இணைய அணுகலை வழங்கும் ஒரு ரௌட்டரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊழல் அதிகாரிகளின் உதவியுடன் சிறைச்சாலைக்குள் இந்தப் பொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக தகவல்-ராகேஸ்