யாழின் மூன்று தீவுகளில் கலப்பு மின்சாரம்: முதல் கொடுப்பனவை வழங்கிய இந்தியா
யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் கலப்பு மின்சார திட்டங்களை(ஹைபிரைட்)நடைமுறைப்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் கொடுப்பனவு, இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி செயலாளர் சுலக்ஷன ஜெயவர்த்தன மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது.
நெடுந்தீவு, நயினாத்தீவு மற்றும் அனலைத் தீவு ஆகிய இடங்களில் கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மார்ச் 2022 இல் கைச்சாத்திடப்பட்டது.
மக்களின் ஆற்றல் தேவை
குறித்த மூன்று தீவுகளின் மக்களின் ஆற்றல் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், சூரிய மற்றும் காற்று உட்பட பல்வேறு வகையான ஆற்றலை ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த திட்டம், 2025 மார்ச் ஆரம்பத்தில் முடிக்கப்பட்டு, 2025 ஏப்ரல் இறுதியில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் இந்திய அரசாங்கத்தின் 11 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவியின் கீழ் செயற்படுத்தப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |