இந்தியா – இலங்கை இருதரப்பு இராணுவப் பயிற்சியான மித்ர சக்தி – XII நிறைவு
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையிலான 12ஆவது இருதரப்பு இராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி – XII’ கடந்த 2026 நவம்பர் 14ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இலங்கையின் மதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் இந்திய மற்றும் இலங்கை ஆயுதப் படைகளைச் சேர்ந்த 350 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பங்கேற்றனர்.
பாதுகாப்பு உறவுகள்
இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் பிரதம பணியாளர் பிரதித் தலைவரான மேஜர் ஜெனரல் கே. ஜே. என். எம். பி. கே. என். நவரத்ன (RWP, RSP, ndu), இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இறுதிச் செயல்விளக்கத்தைப் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 26ஆம் திகதி மதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் ‘மித்ர சக்தி – XII’ இராணுவப் பயிற்சி உத்தியோகபூர்வமாக நிறைவடைந்தது.
‘மித்ர சக்தி’ இராணுவப் பயிற்சியானது இப்பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய இருதரப்பு இராணுவப் பயிற்சிகளில் ஒன்றாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற ‘மித்ர சக்தி’ பயிற்சிகளின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இப்பயிற்சி ஒருங்கிணைந்த ஆயுதப் படைப் பயிற்சி என்ற நிலையிலிருந்து இரு சேவைகளையும் உள்ளடக்கிய (Bi-Service Level Engagement) உயர் மட்டப் பயிற்சியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலும், இரு நாட்டு ஆயுதப் படைகளின் தொழில்சார் திறன்கள் மற்றும் கூட்டுச் செயற்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதிலும் ‘மித்ர சக்தி’ இராணுவப் பயிற்சி முக்கிய பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
