ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பதிவு தொடர்பில் தவறான தகவல் : எரான் விக்கிரமரத்ன
டயானா கமகேவுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பையடுத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பதிவு தொடர்பில் சிலர் கேள்வியெழுப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன(Eran Wickramaratne) சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை தேர்தல்கள் ஆணைக்குழுவில் டயானா கமகே பதிவு செய்துள்ளதாகவும், தற்போது குடியுரிமை விடயத்தில் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சிக்கும் பிரச்சினை எழலாம் என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.
தவறான திசைதிருப்பல்
அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, ஐக்கிய மக்கள் கட்சியை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்தவர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர என்பது மாத்தறையைச் சேர்ந்த அரசியல்வாதியான காஞ்சன விஜேசேகரவுக்கு தொியாமல் போய்விட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கூற்று காரணமாக தவறான திசைதிருப்பல் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆனால் 2020ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் தொடக்கம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகும். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகும்.
2020 மார்ச் மாதம் பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது அதன் பொதுச் செயலாளராக இருந்தவர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகும். அவர் தான் வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்றும் அவர் கைச்சாத்திட்ட வேட்பு மனுக்களை நிராகரிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி தொடுத்த வழக்கு ஒன்றில் நீதிமன்றம் ரஞ்சித் மத்தும பண்டாரவின் நியமனத்தை உறுதிப்படுத்தும் வகையில் தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |