ஜனாதிபதிக்கு எதிரான மீரிஹன போராட்டம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு சபை ஆராயவில்லை. பொய் என்கிறார் பாதுகாப்பு செயலாளர்
மீரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக இலங்கையின் தேசிய பாதுகாப்பு சபை, கூட்டப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அத்தகைய சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை தேசிய பாதுகாப்பு சபைக்கூட்டங்களில் அங்கீகரிக்கப்படாத எவரும்; கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
பாதுகாப்பு அமைச்சர், பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பொது பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், திறைசேரியின் செயலாளர், பாதுகாப்புப் படைத் தலைவர், முப்படைத் தளபதிகள், காவல்துறைமா அதிபர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபையில் சட்டரீதியான உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
தேசிய புலனாய்வுத் தலைவர் மற்றும் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நாயகம், இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் நாயகம், பிரதிப் பரிசோதகர். குற்றப் புலனாய்வுத் திணைக்கள நாயகம்;, பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபையின் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களாகப் பங்கேற்கின்றனர் என்று கமல் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அனைத்து தேசிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் முடிவெடுப்பது, ஜனாதிபதியின் முக்கிய பொறுப்பு என்பதால், ஜனாதிபதி செயலகத்தால் இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, அங்கீகரிக்கப்படாத எவரும் இந்தக்கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என்று கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
எனவே பாதுகாப்பு விடயங்களில் இவ்வாறான தவறான தகவல்களை தவிர்க்குமாறு ஊடகங்களிடமும் பொதுமக்களிடம்; கமல் குணரட்ன வலியுறுத்தியுள்ளார்





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
