சிறுபான்மை கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: கட்சித் தலைவர்கள் தெரிவிப்பு
தேசிய அரசாங்கம் அல்லது சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து எமக்கும் ஏனைய எதிர்கட்சிகளுக்கும் அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (26) கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிகாரபூர்வ அழைப்பு வரவில்லை
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
”சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன. எனினும், இது தொடர்பில் அதிகாரபூர்வ அழைப்பு இன்னும் எமக்கு வரவில்லை.
கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்னிடமும், ஏனைய கட்சி தலைவர்களிடமும் நேரடியாக இது குறித்து கலந்துரையாடினார்.
ஜனநாயக அரசியல் கட்சியின் பொறுப்பு
அழைப்பு வந்ததன் பின்னர், நாம் எமது கட்சிகள் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழுக்களிடமும் ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமை குழுவிடமும் கலந்துரையாடுவோம்.
இதுதான் ஒரு பொறுப்புள்ள நேர்மையுள்ள ஜனநாயக அரசியல் கட்சி செய்ய வேண்டிய முறைமை. அதை நாம் செய்வோம்.
மேலும், எமது முடிவுகளை எமக்கு வாக்களித்து தெரிவு செய்துள்ள, எமது மக்களின் நலன்களை முன்னிட்டு நாம் ஒற்றுமையாக எடுப்போம்.
ரணில் விக்ரமசிங்க அரசுக்கான அவகாசம்
நாடு இன்று இருக்கும் நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசுக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும். அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது.
பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் நலன்களை சார்ந்து மாத்திரம் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் செய்யாது.
புதிய அரசில் சேருகின்றோமோ, இல்லையோ, புதிய அரசமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சருடன் நாம், எமது மலையக தமிழ் இலங்கையர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்வைப்போம்.
அடுத்து வரும் அரசமைப்பு திருத்தத்தில் எமது மக்களின் எதிர்பார்ப்புகளை இடம்பெற செய்ய எம்மாலானதை நாம் பொறுப்புடன் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் சிறுபான்மை கட்சிகளுக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை என கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிக்கடி தெரிவித்து வருகின்றார்.
சிறுபான்மை கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை
சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்படவுள்ளமை குறித்து ஊடகங்கள் வாயிலாக தாம் அறிந்து கொண்டுள்ள போதிலும், தமக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியூதீன் மற்றும் தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் பதவிப்பிரமாணத்தின் பின்னர் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
எனினும், தங்களுக்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் குறித்த தீர்மானம்
மேலும், சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து அது தொடர்பான அழைப்பு வந்த பின்னரே தீர்மானிக்க முடியும் என தமிழ், முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டமைப்புக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய இரகசிய அழைப்பு! மூடிய அறைக்குள் நடந்ததை விளக்கும் செல்வம் |