கூட்டமைப்புக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய இரகசிய அழைப்பு! மூடிய அறைக்குள் நடந்ததை விளக்கும் செல்வம்
இலங்கையில் நடந்தது இன வாதம் தான் என ஏற்றுக்கொள்ள வைப்பதே எமது எண்ணம். இதனை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதி தெரிவில் எமது முடிவு காணப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,“யாரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்று எமது கட்சிக்குள் பல வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சஜித் உட்பட பலர் ஜனாதிபதி தேர்தலில் கலந்துகொள்ள இருந்து பின்னர் தங்களின் முடிவுகளை மாற்றி கொண்டனர்.
இதனால் எமது கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்தது. ஜனாதிபதி தெரிவு நடப்பதற்கு முதல் நாள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யலாம் என தீர்மானிக்கபட்டது.
இந்த தீர்மானம் நாட்டின் பொருளாதார பிரச்சினை, மக்களின் தேவை மற்றும் இன பிரச்சினை என்பவற்றை அடிப்படையாக கொண்டமைந்தது. மேலும் விமல் வீரவன்ச தரப்பினர் இன வாதத்தை கட்டிக்கொண்டு இருப்பவர்கள். அண்மையில் ஐ.நா சபையிலும் இலங்கையில் நடந்தது இன வாதம் இல்லை என கூறும் வகையில் ஜி.எல் பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனவே இதனை அடிப்படையாக கொண்டு தான் எங்களுடைய யுக்தி அமைந்தது. அதாவது இலங்கையில் நடந்தது இன வாதம் தான் என அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதே எமது எண்ணம்.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி.