சட்டமருத்துவ அதிகாரி ரூஹுல் ஹக் எதிராக அமைச்சு மட்ட விசாரணை
சட்டமருத்துவ அதிகாரி ரூஹுல் ஹக் எதிராக அமைச்சு மட்ட விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவ சபையால் அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட போதிலும், இரண்டு முக்கிய பிரேத பரிசோதனைகள் உட்பட சில பிரேத பரிசோதனைகளை அவர் மேற்கொண்டமை தொடர்பிலேயே விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
இதன்போது மர்மமாக உள்ள பிரபல மறைந்த தொழிலதிபர் தினேஸ் சாப்டரின் கொலை மற்றும் கொழும்பு - லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சையின்போது இறந்த குழந்தை ஆகியோரின் பிரேத பரிசோதனையை ரூஹுல் ஹக் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக எஸ்.ஏ. ரத்னசேன என்பவர் முறைப்பாட்டின் மீதான விசாரணையின் பின்னர், ரூஹுல் ஹக்கிற்கு, 2022 டிசம்பர் 20 முதல் 8 மாத பணி இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் 2023. ஆகஸ்ட் 20ஆம் திகதியன்று இந்த இடைநீக்கம் முடிவடையும் என்று கூறப்பட்டாலும், ஹக் இந்த காலகட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.
தொழிலதிபர் தினேஸ் சாப்டரின் மரண விசாரணை
அத்துடன் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் தினேஸ் சாப்டர் மற்றும் அதிகம் பேசப்பட்ட மூன்று வயது குழந்தையான ஹம்டி ஃபஸ்லீன் ஆகியோரின் பிரேத பரிசோதனைகளை ஹக் மேற்கொண்டுள்ளார்.
இடைநிறுத்தத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அந்தந்த நிறுவனத்தின் தலைவருக்கு உள்ளது என்று குறிப்பிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், இது குறித்து அமைச்சு அளவிலான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஹக்கிற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அதன் பதிலுக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஹம்டி ஃபஸ்லீனின் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுவன் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்ததாக ரூஹூல் ஹக் குறிப்பிட்டிருந்தார். இது சிறுநீரக அஜெனிசிஸ் எனப்படும் நிலையாகும்.
ஹக்கின் தடயவியல் பகுப்பாய்வு
எனினும் எவ்வாறாயினும், ஹக்கின் தடயவியல் பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டும் விசாரணைகளை தொடர வேண்டாம் என கொழும்பு மேலதிக நீதவான் ராஜிந்திர ஜயசூரிய பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அவரது அறிக்கைகளில் முரண்பாடுகள் மற்றும் தெளிவற்ற தன்மைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.
தினேஸ் சாப்டரின் பிரேதப் பரிசோதனையின் பின்னர் மருத்துவர் ஹக்கால் தொகுக்கப்பட்ட அசல் அறிக்கையிலும் இறுதி அறிக்கையிலும் முரண்பாடான தகவல்கள் காணப்பட்டதாக மேலதிக நீதவான் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, தம்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துரைத்துள்ள ருஹூல் ஹக் இடைநிறுத்தத்திற்கு எதிராக சுகாதார அமைச்சிடம் முறையிட்டதன் பின்னர் தான் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



