ஆசிரியர் அதிபர்களுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச விடுத்துள்ள கோரிக்கை
ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாடு குறித்த அமைச்சரவை பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட காலமாக கவனத்திற் கொள்ளப்படாத பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அதிபர்களும் ஆசிரியர்களும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தில் தீர்வு வழங்கப்படும் வரையில் இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவது குறித்த யோசனையானது அமைச்சரவை துணைக்குழுவினால் எடுக்கபட்டது அல்ல எனவும் இது கூட்டாக எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினையை மேலும் இழுத்தடிக்காது நாட்டின் மாணவ சமூகத்தின் மேம்பாட்டுக்காக அதிபர்களும் ஆசிரியர்களும் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.