அரகலயவை வன்முறையாக மாற்றியவர்கள் ராஜபக்சக்களே! நாமல் எம்.பியின் கருத்துக்கு அமைச்சர் வசந்த தக்க பதிலடி
அரகலய போராட்டத்தை வன்முறைப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள் ராஜபக்சக்களே என்றும், அமைதியான போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களே அதன் பின் விளைவுகளுக்குப் பொறுப்பு என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரகலய போராட்டத்தின் பின்னணி மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பாகத் தமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று நாமல் ராஜபக்ச எம்.பி. விடுத்திருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து ஊடகங்களிடம் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, "அரகலய போராட்டம் என்பது ஆரம்பத்தில் மிகவும் ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரகலய போராட்டம்
ஆனால், நீண்ட நாட்களாக அமைதியாக இடம்பெற்று வந்த இந்தப் போராட்டத்தின் மீது ராஜபக்ச தரப்பினரே தாக்குதல்களை ஏவிவிட்டனர். அந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்தே நிலைமை கலவரமாக மாறியது.

எனவே, அமைதியான போராட்டத்தைச் சிதைத்து, அதனை வன்முறையாக மாற்றியவர்கள் யார் என்பது குறித்துத்தான் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னிச்சையாக வீதிக்கு இறங்கிப் போராடினார்கள். அதனை வெளிநாட்டுச் சதி என்று கூறுவது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.
தமது அரசியல் தோல்விகளை மறைக்கவே இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து எமது அரசு முறையான விசாரணைகளை முன்னெடுக்கும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவோம்." என்றார்.