13ஆவது திருத்தம் தமிழ் சமூகத்துக்கான அதிகாரப் பகிர்வுக்கு வழிவகுக்கிறது! - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
“ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி மற்றும் அமைதி ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் சொந்த நலனுக்கானதாகவே அமையும்” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜெய்சங்கர், கடந்த மாதம் கொழும்பில் அதன் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடிய போது இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சொந்த நலனுக்காகவே, ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் உட்பட அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற செயற்பாடுகளுக்கு சமமாக அமையும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
13ஆவது திருத்தம் தமிழ் சமூகத்துக்கான அதிகாரப் பகிர்வுக்கு வழிவகுக்கிறது.
இந்த நிலையில் 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு பின்னர் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தை செயற்படுத்த இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.




