அர்ஜூனவிடம் உதவி கோரிய அமைச்சர் நாமல்
முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிடம், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச உதவி கோரியுள்ளார்.
இலங்கையில் கிரிக்கட் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உதவுமாறு உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவரான அர்ஜூனவிடம் நாமல் கோரியுள்ளார்.
மாத்தறையில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
நாட்டின் எந்தவொரு விளையாட்டும் அரசியல் கலப்படமின்றி இருக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளையாட்டுத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு குழுக்களை அமைத்து தீர்வு காண முடியாது எனவும் அது மேலும் இந்தப் பிரச்சினைகளை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரை ஆரம்பித்த போது அர்ஜூன பல்வேறு பெறுமதிவாய்ந்த ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டின் பின்னர் கிரிக்கட்துறை பாரியளவில் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிக்கட் துறையை மேம்படுத்துவதற்கு நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.