திட்டமிட்ட ஊடகச் சவால்களை வெற்றிகொள்ள அரசு தயாராம்: லால் காந்த கூறுகின்றார்
தமக்கு எதிராக முன்வைக்கப்படும் ஊடக சவால்களையும், விமர்சனங்களையும் முறியடிக்க முடியும் என விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (26.04.2026) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான காணிகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டுகள் முன்வைப்பு
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் லால் காந்த, சில ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக வலைப் பின்னல்கள் எமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன.

இவ்வாறான விமர்சனங்களை நாம் ஒரு பாரிய சவாலாகக் கருதவில்லை. அத்தகைய சவால்களை வெற்றி கொள்வதற்கு எனக்கும் இந்த அரசுக்கும் முழுமையான ஆற்றல் உண்டு.
எமக்கு எதிராக திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் இவ்வாறான ஊடகப் பிரசாரங்களை மக்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் மக்கள் நலப் பணிகள் இத்தகைய தடைகளையும் தாண்டி தொடரும் என்றார்.