சவேந்திர சில்வா தொடர்பான கோரிக்கைக்கு பிரித்தானிய ஆயுத படைகளுக்கான நிழல் அமைச்சர் ஆதரவு (Photo)
இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானிய ஆயுதபடைகளின் நிழலமைச்சரும் தொழிற்கட்சியின் Portsmouth South தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரிபன் மோகனுடன் (Stephen James Morgan) உயர்மட்ட சந்திப்பு ஒன்று மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (11) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சட்ட ஆலோசகரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ICPPGயின் பணிப்பாளர் அம்பிகை கே.செல்வகுமார் மற்றும் சில மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
கீத் குலசேகரம் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு (FCDO) இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள் கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடி சாட்சி என்றும் தெரிவித்தார்.
மேலும் தங்கள் தொகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களிற்கு நீதியினைப் பெற்றுக்கொள்ளவதற்கு ஏதுவாகவும், தொடர்ந்து இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகளை நிறுத்துவதற்கு ஏதுவாகவும் தமிழர்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு மற்றும் மக்நிட்ஸ்கை தடைகளிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்களில் இணைந்து செயற்பட அழைப்பு விடுத்ததுடன் சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரும் சிறிய காணொளியினை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் ICPPGயின் பணிப்பாளர் அம்பிகை கே.செல்வகுமார் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்வதற்கு அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், கடந்த ஒரு சில மாதங்களிற்கு முன்னர் சித்திரவதைக்கு உள்ளாகியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களை ICPPG திரட்டி வைத்திருப்பதாகவும், அவற்றை பிரித்தானிய அரசிற்கு வழங்கத் தயார் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.
அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன், தமிழ் மக்கள் சார்பாக நாடாளுமன்ற விவாதங்களின் ஊடாக இவற்றை வெளிக்கொணர்ந்து உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுமான ஸ்ரீ அபிராமி ஸ்ரீ பாலேஸ்வரன் (ஒருங்கிணைப்பாளர்) நல்லதம்பி அரவிந்தராஜ், பவுல்ராஜ் பவிசன், நிலக்சன் சிவலிங்கம், சதேந்லொயிற்றன் புயலேந்திரன், காண்டீபன் கிறிஸ்ரி நிலானி ஆகியோர் உட்பட இன்னும் சிலா் கலந்து கொண்டனர்.

