புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் சலுகைகள்
புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் டியுடிபிரி அடிப்படையில் சில சலுகைகளை வழங்குவதற்கு திட்டமிட்டு அதற்காக திறைசேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைப்பு மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு நேற்று (18.12.2022) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாட்டிற்கு வெளிநாட்டு செலாவணி அதிகம் கிடைக்கும் பிரதான வழியாக வெளிநாட்டு தொழில் வாய்ப்பு இருந்து வருகின்றது. அதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது.
ஓய்வூதியம் வழங்குவதற்கு நடவடிக்கை
குறிப்பாக அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அவர்கள் வீடு கட்டுவதற்கு சலுகை அடிப்படையிலான கடன் வசதிகளை செய்திருக்கின்றோம். வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
இவ்வாறு பல நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடு்தது வருகின்றோம். அத்துடன், அவர்கள் நாடு திரும்பும்போது விமான நிலையத்தில் டியுடிபிரி அடிப்படையில் சில சலுகைகளை வழங்குவதற்கு திட்டமிட்டு அதற்காக திறைசேரிக்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றோம்.
என்றாலும் திறைசேரி அது தொடர்பில் இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அரசாங்கத்தில் இருந்தாலும் சில விடயங்களை நாங்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டி இருக்கின்றது. இல்லாவிட்டால் நாங்கள் எதனையும் செய்யவில்லை என்றே தெரிவிப்பார்கள்.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டு தொழிலுக்கு செல்லும் வீதம் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அனுப்பப்படும் டொலர்களின் தொகை அதிகரித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள்
அத்துடன், வெளிநாட்டுகளில் வசிப்பவர்கள் நாட்டுக்கு அதிக பணத்தை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். என்றாலும் கோவிட் காலத்தில் அவர்கள் நாடு திரும்பும் போது பல்வேறு சக்கல்களுக்கு முகம்கொடுத்தார்கள். அவர்களின் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படவில்லை.
அவர்களை ஆரம்பத்தில் நாட்டின் வீரர்கள் என தெரிவித்தவர்கள், கொவிட் காலத்தில் மனித வெடிகுண்டு என தெரிவித்தார்கள். அரசியல்வாதிகளின் நடவடிக்கையால் அவர்கள் விரக்தியடைந்திருந்தனர். அதன் காரணமாகவே அவர்கள் அரச வங்கிகள் ஊடாக நாட்டுக்கு பணம் அனுப்புவதை நிறுத்திக் கொண்டார்கள்.
என்றாலும் தற்போது நாங்கள் அவர்களை தேவைகளை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதால் அவர்களும் அரசாங்கத்தின் மீதி நம்பிக்கை வைத்து முறையான நடவடிக்கையில் பணம் அனுப்புகின்றனர்.
அது பழைய நிலைமைக்கு இன்னும் திரும்பவில்லை. 2020 காலத்தில் அன்னிய செலாவணியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தொகையை மீண்டும் பெற்றுக்கொள்வதே எமது இலக்காகும் என குறிப்பிட்டுள்ளார்.