மத்திய கிழக்கு போர்: எரிபொருள் விநியோகத் தடை - நிலைகுலைந்துள்ள ஜப்பான்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடை ஜப்பான் நாட்டை நிலைகுலையச் செய்துள்ளது.
ஜப்பானின் பிரம்மாண்ட இரசாயன உற்பத்தித் தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான நாப்தா (Naphtha) மற்றும் இதர எரிபொருட்களைப் பெறுவதில் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றன.
போரினால் ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், கப்பல்கள் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இது போக்குவரத்துச் செலவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மசகு எண்ணெய் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளது.
உற்பத்தித் திறனைக் குறைக்க வேண்டிய கட்டாயம்
இதனால் பல தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தித் திறனைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. தொழில்துறை மட்டுமல்லாது, ஜப்பானியர்களின் கலாசாரத்தோடு இணைந்த 'சென்டோ' எனப்படும் பாரம்பரிய பொதுக் குளியல் நிலையங்களும் (Sento baths) மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

தண்ணீரைச் சூடாக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை மும்மடங்கு உயர்ந்துள்ளதால், இந்தக் குளியல் நிலையங்களை நடத்துவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
"முன்பு ஒரு மாதத்திற்கு ஏற்பட்ட எரிபொருள் செலவு, இப்போது ஒரு வாரத்திலேயே ஏற்பட்டுவிடுகிறது" என அவர்கள் கூறுகின்றனர். ஜப்பான் அரசு மாற்று வழிகளில் எரிசக்தி திரட்ட முயன்றாலும், மத்திய கிழக்கு நாடுகளின் மீதான அதிகப்படியான சார்புநிலை தற்போது அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தியுள்ளது. இது சாதாரண நுகர்வோர் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை அனைவரையும் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.