மத்திய கிழக்கு போர்: ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பலி
மத்திய கிழக்கில் போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், சிறுவர்கள் மீதான பாதிப்புகள் சொல்லொணாத் துயரமாக உருவெடுத்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த மோதலில் 340-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இதில் ஈரானில் 216 சிறுவர்களும், லெபனானில் 124 சிறுவர்களும், இஸ்ரேலில் 4 சிறுவர்களும், பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை மற்றும் காசா பகுதியில் 16 சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.
ஏவுகணைத் தாக்குதல்
குறிப்பாக, ஈரானில் உள்ள ஷஜரே தய்யிபே பாடசாலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒரே நாளில் 168 சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இந்த போரின் மிகக் கொடூரமான நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.
இந்த மோதலால் சுமார் 12 இலட்சம் சிறுவர்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் குடிநீர் விநியோகக் கட்டமைப்புகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதால் சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
"சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டிய அமைப்புகளே இப்போது தாக்குதலுக்கு உள்ளாகின்றன.இது சிறுவர்களின் மனநலம் மற்றும் வளர்ச்சிக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும்" என்று யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் கவலை தெரிவித்துள்ளார்.