ஏர் கனடா விமான விபத்து:வெளியான பகீர் தகவல்கள்
நியூயோர்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் கடந்த மார்ச் 22ஆம் திகதி தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி இரண்டு விமானிகள் பலியான சம்பவத்தில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்துப் புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன.
விபத்து நடந்த இரவு 11:37 மணியளவில், விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, விதிகளை மீறி இரண்டு விதமான பொறுப்புகளை ஒருவரே கவனிக்கும்படி ஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம் என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
லாகார்டியா விமான நிலையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறை ஆவணங்களின்படி, நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக 'லோக்கல்' மற்றும் 'கிரவுண்ட்' ஆகிய இரண்டு முக்கியப் பணிகளையும் ஒருவரே கவனிக்கும்படி இணைக்கக் கூடாது என்பது விதியாகும்.
விபத்து
ஆனால், விபத்து நடந்த நேரத்தில் ஓடுதளத்தை நிர்வகிக்கும் அதிகாரி, தரைவழிப் போக்குவரத்தையும் கவனித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் தலைவர் ஜெனிபர் ஹோமெண்டி அந்த நேரத்தில் பணியில் இருந்த இரு அதிகாரிகளில் யார் தரைவழிப் போக்குவரத்தைக் கவனித்தார்கள் என்பதில் முரண்பட்ட தகவல்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முழுவதும் நிலவும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பற்றாக்குறை, ஊழியர்கள் மீதான பணிச்சுமையை அதிகரித்துள்ளதோடு, இத்தகைய ஆபத்தான விதிமீறல்களுக்கும் வழிவகுப்பதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தீவிர விசாரணை
1997-ல் இதே விமான நிலையத்தில் நடந்த ஒரு விபத்திற்குப் பிறகுதான், நள்ளிரவுக்கு முன் பணிகளை ஒருங்கிணைக்கக் கூடாது என்ற விதி கொண்டு வரப்பட்டது.

தற்போது அதே விதி மீறப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.