உயரும் மசகு எண்ணெய் விலை: தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் உற்பத்தியைக் குறைக்க சீனா முடிவு!
ஈரான் மீதான போர் மற்றும் சர்வதேசக் மசகு எண்ணெய் விலை உயர்வு காரணமாக, ஏப்ரல் மாதம் முதல் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு அளவைக் குறைக்கப் போவதாகச் சீனாவின் சிறிய அளவிலான தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் அறிவித்துள்ளன.
கடந்த காலங்களில் ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து மலிவான விலைக்குக் மசகு எண்ணெயைப் பெற்று இலாபம் ஈட்டி வந்த இந்த நிறுவனங்கள், தற்போது அமெரிக்காவின் தற்காலிகக் கட்டுப்பாட்டுத் தளர்வுகளால் இந்திய உள்ளிட்ட நாடுகள் போட்டிப்போட்டுக்கொண்டு எண்ணெய் வாங்குவதால் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.
10 டொலர் தள்ளுபடி
குறிப்பாக, போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு பீப்பாய்க்கு 10 டொலர் தள்ளுபடியில் கிடைத்த ஈரானிய எண்ணெய், தற்போது பிரெண்ட் மசகு எண்ணெய் விலைக்கு இணையான விலையில் விற்கப்படுவது இந்த நிறுவனங்களின் இலாபத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக, இந்தத் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறன் 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அரசாங்கம் எரிபொருள் விலையை ஓரளவுக்கு மேல் உயர்த்தக் கூடாது என உச்சவரம்பு விதித்துள்ளதால், மசகு எண்ணெய் விலை உயர்ந்தாலும் அந்தச் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடியாமல் சுத்திகரிப்பு நிலையங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.
ஏப்ரல் இறுதி வரை நீடிப்பு
கடந்த மார்ச் 23 அன்று சீனா தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே 1,160 யுவான் மற்றும் 1,115 யுவான் உயர்த்திய போதிலும், அது சர்வதேச மசகு எண்ணெய் விலையேற்றத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சூழலில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான புதிய மசகு எண்ணெய் கொள்முதல் திட்டங்களை இந்த நிறுவனங்கள் தற்காலிகமாகத் தள்ளிவைத்துள்ளன.

தங்களிடம் உள்ள குறைந்த விலையிலான இருப்பு ஏப்ரல் இறுதி வரை மட்டுமே நீடிக்கும் என்பதால், மூலதன நெருக்கடியில் உள்ள பல நிறுவனங்கள் முன்கூட்டியே உற்பத்தியை முடக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
உள்நாட்டில் எரிபொருள் தேவை குறைவாக இருப்பதும், மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும் சீனப் பொருளாதாரத்தில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.