உடன் பிறப்புகளின் உயிர்காப்பிற்கான உதவிக் கரம் நீட்டும் MGR 109 இசை நிகழ்ச்சி!
மக்களின் நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் பேரன்பையும் தனதாக்கி இதுவரை 176 தாய் மண் உறவுகளின் உயிர்களைக் காப்பாற்றி தொடர்ந்து மனிதம் தழைக்க இடையறாது உழைத்து வரும் செந்தில் குமரன் இந்த ஆண்டின் நிவாரண அமைப்பிற்கான நிதி சேர்ப்பு நிகழ்வொன்றை நடத்தியுள்ளார்.
Lankasri இன் பிரதான ஊடக அனுசரணையுடன் கடந்த 12/12/2025 மாலை 07:00 மணிக்கு Scarborough Metropoliton அரங்கத்தில் இடம் பெற்ற நிவாரணம் MGR 109 எனும் உடன் பிறப்புகளின் உயிர்காப்பிற்கான உதவிக் கரம் நீட்டும் இசை நிகழ்ச்சியொன்று இடம்பெற்றிருந்தது.
இசை நிகழ்ச்சிக்கு வழமை போல் நானும் சென்றிருந்த வேளையில் கண்ட காட்சிகள் கண்களைப் பனிக்கவே வைத்தன என்று ஒரு மனிதநேய பங்காளனான க.இராசநாதன் தெரிவித்துள்ளார்.
உயிர் காப்பிற்கு நிதியுதவி
மேலும் தெரிவிக்கையில்,
ஏதோ குடி வந்த இப்புல தேசத்தில் வளம் பெருக்கி எமது வாழ்வை நாம் மட்டும் மகிழ்வாக வாழ்ந்தோம் என்றில்லாது பிறரையும் வாழவைத்து வாழ்தலே மனித பண்புடைய வாழ்வு எனும் பரந்த புரிதலுக்கு அமைவாக அங்கு வருகை தந்திருந்த மண்ணின் உயிர்ப்பு மாறாது வாரி வழங்கும் தாராள குணம் படைத்த மக்கள் வெள்ளத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்.
நிகழ்ச்சியானது தொடங்குவதற்கு முன்பே அங்கு சென்றிருந்த நான் வாகன தரிப்பிடமின்றி சிறிது நேரம் காத்திருக்க நேர்ந்த போதும் உணர்வுமிக்க எம் மக்களின் உயிர்காக்க உதவிடும் தாகமும் வாஞ்சை மிகு உளப்பாங்கும் அத்தனை அபரிதம் கொண்டதாக இருந்தது கண்டு மனம் பூரித்து நின்றது.

வைத்தகண் வாங்கிடாது தாயகத்திலே நோயின் தாக்கங்களினால் மீளும் வகையற்று உயிர் பிழைக்க அல்லலுறும் எம் உடன்பிறப்புக்களின் துன்பக் காட்சிளையும் அவர் தம் உதவிக்கான ஆத்மார்த்த மன்றாட்டுக்களையும் காணொளிகள் வாயிலாக கண்டு மனமுருகிய மக்கள் தமது தாராள பங்களிப்பினை வழங்கவென நீள் தொடராக வரிசை கட்டி நின்ற காட்சி விழிநீர் சொரிய வைத்தது எனலாம்.
தமிழக சினிமாத் துறை சார் பிரபலங்களின் குதூகல நிகழ்ச்சிகளுக்காகவும் அவர்களுடனான நிழற்படங்களைப் பெறுவதற்காகவும் முன் கூட்டியே வலைத்தளங்களில் ஆயிமாயிரமாகச் செலவிட்டு நுழைவுச் சீட்டுகள் பெற்றுப் பேருவகை செய்யும் போக்குடைய புதிய வழமைகள் நிலவும் இக்காலத்தில் இங்கு விரைந்த நம் மக்களோ பிறர் துன்பத்தை தம் துன்பமாக எண்ணி தமது தயாள சிந்தனைகளிற்கு முதலிடமளித்து மனம் நிறைய கை நிறைய தம் பங்களிப்புகளை வழங்கிய காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது.
நிவாரணம் செயல்திட்டங்களுக்கு கோவிற் தொற்றுக்கு முந்திய 2016 ஆண்டு காலத்தில் இருந்து இன்று வரை 135,000.00 கனேடிய டொலர்களை நன்கொடையாக வழங்கிய பிரபல Quality bakery உரிமையாளரான திரு.திருமதி.பிரான்சிஸ் அந்தோனி அவர்களை பலராலும் அறியப் பெற்ற மகப்பேற்று மருத்துவரான Dr. கிருபா நந்தன் செந்தில்குமரன் சார்பில் மாலை அணிவித்து மதிப்பளித்துக் கௌரவித்தார்.
எனக்குத் தெரிந்த வரையில் இந்த உயிர் காப்பிற்கு நிதியுதவி பெறுவதற்கான மற்றும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாக முன்கூட்டியே கடந்த ஒரு மாதமாக திரு செந்தில் குமரன் தமது சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஓர் இதய வடிவமைப்பை உருவாக்கி 500 டொலர் நன்கொடை அளித்து அந்த இதயங்களை வாங்கி உயிர் காக்க உதவுமாறு சமுகவலைத் தளங்களில் வினயமாக வேண்டி இருந்தார்.
மனம் படைத்த மக்கள்
அதன் பயனாக பற்பல உணர்வாளர்கள் அவ் இதயங்களைப் பெற்று உதவிய பங்களிப்புகளின் மூலமாக அன்று மாலை வரை 89.000.00 கனேடிய டொலர்களை நிகழ்விற்கு வழங்கி ஒரு பெரும் மனிதநேய சாதனையைப் படைத்துள்ளார்கள் நம் மனம் படைத்த மக்கள் எனும் செய்தி செந்தில் குமரனால் மேடையில் அறிவிக்கப் பெற்றது தெரிந்து மக்கள் கைதட்டி ஆரவாரித்து புழகாங்கிதம் அடைந்தனர்.
மண்டப நிகழ்ச்சி தொடங்கி சற்று நேரத்தில் செந்தில் குமரன் தாயகத்திலே தனது பிள்ளைக்கு இருதய சத்திரச் சிகிச்சை வேண்டி கண்ணீர் மல்க இரந்து நிற்கும் ஒரு தாயின் உருக்கமான வேண்டுதல் ஒன்றை காணொளி வாயிலாகக் காட்சிப் படுத்தி இதே நிலையில் கைவசம் இருபதிற்கும் மேலான அவசர கோரிக்கைகள் மிகவும் ஆபத்து நிலையில் தன்னிடம் இருப்பதாகக் கூறி அந்த சிகிச்சைகளுக்காக 500 டொலர் பங்களிப்பு வழங்க விரும்புவோர் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு ( Candle wall ) எனும் சுடர் பீடத்தில் ஒரு சுடரை ஏற்றி அந்நிதியுதவியைப் புரியுலாம் என வேண்டிய அதே வேளை, அதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் " உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ " எனும் உணர்வு ததும்பும் பாடலை அனைத்துப் பாடகரின் பின்னணியுடன் திரு.செந்தில் குமரன் தன் தெய்வீக குரல் சாரத்துடன் பார்ப்போர் மனம் உருகி நெகிழும் படியாகப் பாடி பங்களிப்போரை வாழ்வு வேண்டும் மக்களுக்காக யாசித்து நின்ற வேளை மக்கள் உணர்ச்சிப் பெருக்கோடு முன் வந்து வரிசை கட்டி தலைக்கு ஒன்று இரண்டென சுடர்களைப் பெற்று சுடர் பீடத்தை நிறைத்திருந்த நிகழ்வு அனைத்து விழிகளையும் நீர் கசிய வைத்தது.

இச்சுடரேற்று நிகழ்வில் சுடர் வாங்கிய மக்களின் பங்களிப்பாக 35,000.00 டொலர்கள் ஒரு சில மணி நேரத்தில் வழங்கப்ட்டதாக பதிவாகியது குறிப்பிடத் தக்கது. இவ் இசை நிகழ்ச்சியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாய் அமைந்த " லதன் சகோதரர் " இசைக்குழுக் கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் காதுக்கினிய இசைக்கு மேலும் இனிமையூட்டும் படி திரு . செந்திதில் குமரன் அவர்களின் நெறியாள்கையில் அவரோடு இணைந்து பாடகர்கள் மகிஷா , சாம்பவி, , சந்தியா, அபிராமி, வித்தியாசங்கர், விஜிதா , சகானா , சுரபி , ஆகியோர் மக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய வண்ணம் இருந்த அந்த இரம்மிய சூழல் சொல்வதற்கு வார்தைகளற்ற இன்பச் சிறப்பாகும்.
இங்கு இன்னமும் தித்திப்பாக திரு.வித்யா சங்ககரும் மகிஷாவும் இணைந்து வழங்கிய " சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதம்மா " என்ற பாடல் பாடி ஓய்ந்த பின்னும் பார்வையாளரின் இன்பப் பெருக்கோடு கூடிய கைதட்டல் சில நிமிடங்கள் கழிந்தும் தொடர்ந்தும் ஒலித்த வாறே இருந்த நிகழ்வானது இப்போதும் தெஞ்சத்துள் இனிக்கிறது.
இசை அரங்கு
இவை அனைத்தையும் உச்சம் தொடும் வண்ணம் தமது கம்பீரக் குரலால் அறிவிப்பாளர்கள் குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களும் நந்தினி அவர்களும் தமது மதுரக் குரலால் நிகழ்ச்சிகளை நகைச்சுவையுடனும் சுவாரிசியம் மிக்கதாகவும் அட்டகாசமாகவும் இனிதே தொகுத்து வழங்கி எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது இரட்டிப்பான சிறப்பெனலாம். நிவாரணம் எனும் இந்த நலன் காப்பு அமைப்பின் அதி உச்ச வெளிப்படைப் பண்பாக மேற் கூறிய வரவு செலவு அனைத்திற்குமான ஒரு சதம் பிசகாத ஆண்டறிக்கை கணக்குகள் யாவும் அட்டவணைப் படுத்தப்பட்டு வழங்குனர் பெயர், வழங்கிய தொகை அவற்றை பெற்றுக்கொண்ட பயனாளிகள் நோய்களுக்கு செலவான தொகை பயனாளிகளின் பெயர்கள் போன்ற அனைத்து தரவுகளும் தமது நிவாரணம் எனும் திரு.செந்தில் குமரனது இணைய வழி மூலம் அனைவரும் காணும் வண்ணம் பதிவேற்றப் பட்டிருப்பது அவரது இந்த இறை நிகர் பணிக்கான சான்றாகின்றது என்றே சொல்வேன்.
இன்னமும் துல்லியமாகச் சொல்லின் இந்நிவாரணப் பணிக்கான நிதி திரட்டலின் ஒழுங்கமைப்புகளான இசை அரங்கு தொட்டு விமானப் பயணங்கள் வரை ஏற்படக்கூடிய அனைத்து செலவுகளும் திரு.செந்தில் குமரனதும் அவர் துணைவியாரதும் சொந்தப் பணத்திலிருந்தே மேற்கொள்ளப் படுகின்றது என்பது அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு பேருண்மை என்பது அவர்தம் உளத் தூய்மையின் சிறப்பு எனலாம்.

நிவாரணம் என்ற சொல்லிற்கு சற்றும் பிசகாது உளத் தூய்மையுடனும் நெஞ்சுருகும் மனித நேயத்துடனும் தம் நேரத்தினையும் உழைப்பினையும் தம் இயல்பிற்கு மீறிய வகையில் கருதிய கருமத்திற்காக அர்ப்பணித்து அல்லும் பகலும் தனது மனிதநேயக் கனவுகளிற்கும் அதன் அடைவுகளிற்கும் அயராது ஓடோடி நிற்கும் செந்தில் குமரனும் அவர் தம் இலட்சியப் பயணத்திற்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் உடனிருந்து உந்திப் பணியாற்றும் திரு செந்தில் குமரனின் துணைவியார் திருமதி. நிறஞ்சனா செந்தில்க்குமரன் அவர்களும் அவர் கைகளை நம்பி உயிர் பிழைக்கவென நம்பிக்கை தளராது தாயகத்தில் ஏங்கிக் காத்திருக்கும் அந்த அனாதரித்த எமதன்பு உறவுகளுக்கும் கிடைத்த பேறு என்றால் மிகையல்ல எனலாம். எமது கொடையாள மக்களின் தர்ம சிந்தனையும் பிறர் நலனில் அவர்களுக்குள்ள ஈடுபாடும் பாராட்டுக்குரியன என்று மட்டும் சொல்லி அவர்தம் பேரன்பையும் பெரு மனதையும் வரையறுக்க முடியவில்லை. அத்தனை விசாலமான அவர் தம் சிந்தனைக்கு ஒரு சக தமிழனாக தலை வணங்குகிறேன்.
இவ் இசை விருந்தின் இன்னோர் அம்சமாக இந்நிதி சேர்ப்பு மேடையினை ஒரு வெறும் சோகமானதாகவோ இல்லை ஒரு மௌன இராகக் கூடாரமாகவோ அல்லாது அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் தத்துவார்த்த பாடல்களுக்கும் மனிதநேயம் மிக்க அவர் தம் சிந்தனைகள் தாங்கிய திரைச் செய்திகளுக்கும் மற்றும் அக்காலத்தைய சிவாஜி கணேசன் போன்று இன்ன பிற நடிகர்களின் சமூகமாற்றங்களைப் பிரதிபலிக்கும் பாடல்களின் செய்திகளுக்கும் புத்துயிர் ஊட்டும் வகையில் செந்தில் குமரனது எழுச்சிமிக்க குரலிலும் பொன்மனச் செம்மலது சாயலிலான கவர்ச்சி மிக்க தோற்றங்களிலும் மற்றைய பாடகர்களின் உடையலங்காரங்களையும் அக்காலத்திற்கேற்ப ஒப்பனை செய்தும் மிகப் பொருத்தமான காட்சியமைப்புக்களை வடிவமைத்து இன்ன பிற கலைஞர்கள் சகிதம் ஓர் இனிய முத்தமிழ் விருந்தாக பார்வையாளரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது கொடையாளருக்கு அவர் வழங்கும் மதிப்பாகவும் விலைமதிப்பற்ற அவர் தம் அனுசரணைக்கும் ஒத்தாசைக்கும் அவர் தன் கலைத் திறன் கொண்டு பகரும் நன்றியறிதலாகவும் கூட பொருள் கொன்டிடலாம்.
உறுதி மொழி
ஈற்றில் மக்கள் திலகம் அவர்களின் புகழ் பெற்ற பாடலாகிய " நாளை நமதே அந்த நாளும் நமதே " எனும் நம்பிக்கை நட்சத்திரப் பாடலுடன் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இசை மழை இனிதே நிறைவு பெற்றது!

இதுவரை காக்கப்பட்ட 176 உயிர்களோடு விரைவில் இருநூறாவது உயிர்காப்பை எட்ட இருக்கும் எம் எல்லோரது கனவுகளும் நனவாகிட ஏனைய நோயாளர்களுக்கும் இன்னும் இன்னும் உயிர் காக்கும் வழிகள் பிறக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொண்டு " எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்” எனும் பாரதியின் புரட்சி முழக்கத்திற்கிணங்க இது போன்ற மனித நேயப் பணிகளில் இன்றல்ல என்றும் மக்கள் நாம் அனைவரும் பங்காளிகளாக இருந்து முடிந்தவரை ஏனையோருக்கும் நல்வாழ்வு சமைத்து நாமும் வாழ்வோம் என்ற திடசங்கற்பத்துடனும் உறுதி மொழியுடனும் வாழ்க மனிதம் என்று நாமும் இன்றே சூழுரைத்திடலாம்.
வாழ்க நிவாரணம்! வாழ்க செந்தில் குமரன்!
செந்தில் குமரனின் தொடர்பு இலக்கம்: 416 200 7652












விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri