கண்டியில் மெட்ரோ பேருந்து சேவை அறிமுகம்
கண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளுக்கு மெட்ரோ நகர்ப்புற ஆடம்பர பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கண்டி முதல் கம்பளை வரையிலான 19 கிலோமீட்டர் பாதையில் மெட்ரோ பேருந்தின் சோதனை ஓட்டம் இன்று(15.10.2026) நடத்தப்பட்டது.
இதன் மூலம் பொருத்தமான வழித்தடங்கள், பேருந்து நிறுத்த அமைவிடங்கள் மற்றும் செயற்பாட்டுத் தேவைகள் மதிப்பிடப்பட்டன.
மெட்ரோ பேருந்து சேவை
இதன்படி, இந்த பேருந்து சேவை,கண்டி நகரம், சேனாநாயக்க வீதி, தலதா வீதி, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, முல்கம்பலை, கெடம்பே சந்தி, கலாஹா சந்தி, பேராதனை, அங்குணவெல, கெலிஓயா, வெலிகல்ல, கஹட்டபிட்டிய, கம்பளை நகரம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை வரையில் சேவையில் ஈடுபடவுள்ளது.

லங்கா மெட்ரோ ட்ரான்சிட்' நிறுவனம் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில், 7 வழிகளில் 122 மெட்ரோ பேருந்துகளை இயக்கி வருகிறது.
மேல் மாகாணத்திற்கு வெளியே நகரப்புற ஆடம்பர போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கும் மெட்ரோ பேருந்து சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.