மட்டக்களப்பு மாநகரசபையினால் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகர ஆணையாளருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அதிகார குறைப்புக்கான பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகரசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 44வது அமர்வு நேற்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சம்பிரதாய பூர்வமாகச் சபை அமர்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.
நேற்றைய சபை அமர்வின் போது மாநகரசபையின் நிலையியல் குழுக்கள் மூலமும், மாநகரசபை முதல்வர் மூலமும் முன்மொழியப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களுக்குச் சபையினால் அனுமதிகள் வழங்கப்பட்டன.
அத்துடன், வீதியோர வியாபாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்வதற்காக மாநகர பிரதி முதல்வர் ச.சத்தியசீலன் தலைமையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
இந்த அமர்வின் போது மாநகரசபையின் பதவி நிலை உத்தியோகத்தர்களின் விடுமுறை நாள் கொடுப்பனவு தொடர்பான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்ட போது பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக உறுப்பினர்கள் சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது அது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து விடுமுறை நாள் கொடுப்பனவு தொடர்பில் மாகாண பிரதம செயலாளரின் அறிவுறுத்தல்களைப்பெற்று மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், மாநகரசபையில் பெருகைக் குழுவொன்று நடைமுறையில் உள்ள நிலையிலும் 29-01-2021 அன்று கேள்வி சபைக்குச் சமர்ப்பிக்காது மாநகரசபை ஆணையாளர் கையொப்பம் இட்டு மாநகரசபையின் நடைமுறைக்கு முரணாக வெளியிடப்பட்ட கேள்விப்பத்திரத்தினை ரத்து செய்வதற்கும், புதிய கேள்விப்பத்திரத்தினை வெளியிடுவதற்கான சபையின் அனுமதியைக் கோரிய நிலையில் அது தொடர்பில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.
இதன்போது மாநகரசபை ஆணையாளர் தமது கருத்தினை பதிவு செய்யச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனக் கோரியபோது சபை ஒத்திவைக்கப்பட்டு அவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதன்போது தான் மாநகரசபையின் சட்ட திட்டங்கள் அதன் கட்டளைகளுக்கு அமைவாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அது தொடர்பில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் தன்னிடம் வந்து கோரிக்கை விடுத்தால் அதற்கான விளக்கத்தினை தர ஆயத்தமாகவுள்ளதாகவும் தன்னை சபையில் அவமதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாம் என நீண்ட உரையினை வழங்கினார்.
இதனை தொடர்ந்து நீண்ட வாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. உறுப்பினர்களினால் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாநகரசபையின் ஆணையாளர் சபையிலிருந்து வெளியேறிச்சென்றார்.
ஆணையாளர் சபையின் தீர்மானங்களை நிறைவேற்றத்தவறுவதுடன் சபையின் எனினும் கேள்வி கோரப்பட்டு மாநகரசபையினால் பணம் அறவிடப்பட்டவற்றுக்கு மீண்டும் கேள்வி கோரமுடியாது எனவும், அவற்றினை தவிர்த்து ஏனையவற்றுக்குக் கேள்விப்பத்திரம் கோருவது எனவும் மாநகரசபை முதல்வர் முன்வைத்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு சபை அனுமதி வழங்கியது.
அதனை தொடர்ந்து மாநகரசபையின் ஆணையாளர் சபையினால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில்லையெனவும், சபை தீர்மானங்களைக் கவனத்தில் கொள்வதில்லையெனவும், அவரின் அதிகாரங்கள் சிலவற்றினை ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்குச் சபையின் அனுமதியை வழங்குமாறு மாநகர முதல்வர் சமர்ப்பித்த பிரேரணைக்கு எதிராகவும், ஆதரவாகவும் உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் உட்பட 19 உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் சபையினை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து சபையிலிருந்த உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையில் 38 உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஏனைய 20 உறுப்பினர்கள் வெளியேறிச்சென்ற நிலையில் 19 உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.









