பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவதற்கான ஆதரவை கோரி அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம்
இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனிபிளிங்கென் ஆதரவளிக்க வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேர் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துதல்
அந்த கடிதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தனது 77 அமர்விற்காக கூடுகின்ற இந்த தருணத்தில் இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு ஆதரவளிக்குமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருடன் இணைந்து செயற்படுமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை பொறுப்புக்கூறச்செய்வதற்கு தடைகள் உட்பட இராஜதந்திர சாதனங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
தசாப்தகால யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி மற்றும் பரிகாரம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மாத்திரம் இலங்கை தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு முழுமையான தீர்வை காணமுடியும்.
2009 இல் முடிவடைந்த இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் விடுதலைப் புலிகளிற்கும் எதிரான 27 வருட கால போரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர், காணாமல்போயினர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 13 வருடங்களிற்கு பின் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றனர் என சமீபத்தைய செப்டெம்பர் 22 - ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவிக்கின்றது.
2020 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியது போல கடந்த கால குற்றங்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதற்கு இலங்கை இன்னமும் தீர்வை காணவில்லை என்ற அடிப்படை பிரச்சினை இன்னமும் நீடிக்கின்றது இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
முக்கிய நாடாக காணப்படும் அமெரிக்கா
அனைத்து சமூகத்தினரும் கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதியற்று காணப்படுகின்றனர். இலங்கையின் கடந்த கால யுத்த குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோளை விடுப்பதில் அமெரிக்கா முக்கியமான நாடாக காணப்படுகின்றது.
2015 இல் இலங்கை இணை அனுசரணை வழங்கிய தீர்மானமொன்றை மனித உரிமை பேரவை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா முன்னிலையில் காணப்பட்டது. 2021 இல் யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிப்பது நீதியை கண்டறிவது குறித்து ஆலோசனை வழங்குவது ஆகியவற்றை கோரிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்கா முக்கிய பங்களிப்பை வழங்கியது.
எனினும் 2019 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையின் உறுதிமொழிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பின்வாங்கினார். அவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இலங்கை அரசாங்கம் உறுதியான நிலைமாற்று நீதி செயற்பாட்டை முன்வைக்கவில்லை.
குற்றவாளிகளை பொறுப்புக்கூறச் செய்தல் இலங்கையின் உள்நாட்டு யுத்ததின் மனித குலத்திற்கு எதிரான குற்றம், யுத்த குற்றங்கள் ஆகியவற்றிற்காக சர்வதேச நீதி பொறிமுறையை உருவாக்குவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் விளங்க வேண்டும். இலங்கையின் மூன்று அதிகாரிகளிக்கு எதிராக தடைகளை விதித்தமைக்காக உங்களை பாராட்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
