வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ள காணி.. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி...!
எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 10,000, ஏக்கர் காணி வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதா என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு - கிழக்கு காணி பிணக்குகள் தொடர்பான கூட்டமொன்று பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (23.05.2025) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது அண்மையில் வெளியிடப்பட்ட காணிசுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அங்கு கருத்து தெரிவித்த சத்தியலிங்கம், "சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் வவுனியா மாவட்டத்தில் உள்ள வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக அவ்வனத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
வர்த்தமானி அறிவித்தல்கள்
இதற்காக வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 10,000 ஏக்கர் காணி வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிகின்றோம். ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் பெருமளவிலான பொதுமக்களிற்கு சொந்தமான காணிகள் உள்வாங்கப்பட்டிருந்தன. அவை இடம்பெயர்வுக்கு முன்பு மக்கள் குடியிருந்த மற்றும் அவர்களது பயன்பாட்டில் இருந்த காணிகளாகும்.
எனவே வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தவதற்கு முன்னர் பொதுமக்களின் பாவனையிலிருந்த காணிகளை அடையாளங்கண்டு அவற்றினை முற்றாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், வவுனியா மாவட்டம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் மாணிக்கம் பண்ணைப்பகுதியில் (மெனிக்பாம்) 2009 இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டார்கள்.
குடியிருப்பு தேவை
2010ஆம் ஆண்டுக்கு பின்னர் படிப்படியாக மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் முற்றாக வெளியேறிய நிலையில் கடந்த 15 வருடங்களாக இராணுவத்தினர் அந்தக்காணிகளை சுற்றி வேலிகள் அமைத்து பொதுமக்கள் உட்செல்வதற்கு தடை விதித்துள்ளதுடன் அங்கு விவசாயப் பண்ணை அமைத்து பயிச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். உண்மையில் இந்தக்காணிகள் பொதுமக்களுக்கு சொந்தமானவை.
அவை பலதரப்பட்ட காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள காணிகளாகும். எனவே மேற்படி காணிகளை விடுவித்து காணி உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வவுனியா நகரப்பகுதியில் மக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக 50 வருடங்களுக்கு முன்னர் காணிகள் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தன.
50 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது மேற்படி காணிகளுக்கான உறுதி வழங்குவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. காணி உறுதிக்கு விண்ணப்பிக்கும் போது நகர எல்லைக்குள் தலா 02 பரப்பு காணிக்கே குடியிருப்பதற்கான காணி உறுதி வழங்கலாமெனவும் மீதமுள்ள காணிக்கு விவசாய மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கான காணி உறுதியே வழங்கமுடியும் என்று கூறப்படுகின்றது. எனவே மேற்படி குடியிருப்பு தேவைக்காக வழங்கப்பட்ட காணி முழுவதிற்குமான உறுதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் ” என கோரினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



