பங்களாதேஷ் பிரதமரை சந்தித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
பங்களாதேஷூக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனவை சந்தித்து இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளளது.
டாக்காவில் உள்ள பிரதமர் ஹசீனாவின் செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
கோவிட்-19 தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள வெற்றி மற்றும் இலங்கையில் தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர், பங்களாதேஷ் பிரதமருக்கு விளக்கியுள்ளார்.
ஏற்கனவே உத்தியோகபூர்வ மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை உடன்படிக்கை வரை கொண்டு செல்வது தொடர்பான முன்னேற்றம் மற்றும் கடற்துறை சம்பந்தமான விடயங்களில் ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் இதன்போது கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை விரிவான டிஜிட்டல்மய வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தமது அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பங்களாதேஷ் பிரதமர், வெளிவிவகார அமைச்சரிடம் விபரித்துள்ளார்.
கொழும்பு - டாக்கா இடையிலான விமான சேவைகளை முன்னேற்றுவது மற்றும் சுற்றுலாத்துறை மேம்படுத்துவது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்து சமுத்திர நாடுகள் சங்கத்தின் உப தலைவர் பதவியை பொறுப்பேற்பதற்கான அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த திங்கள் கிழமை டாக்காவுக்கு சென்றார்.
இலங்கை அண்மையில் பங்களாதேஷிடம் 200 மில்லியன் டொலர்களை கடனுதவியாக கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.