கீரிமலையில் அனுமதியின்றி கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் - உடனடியாக அகற்றுமாறு உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவு
கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் மீள அள்ளப்பட வேண்டும் என்ற உள்ளூராட்சி ஆணையாளரின் கடுமையான உத்தரவினை தொடர்ந்து, அவற்றை மீள அள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினர் சுமார் 300 டிப்பர் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். அவற்றினை மீள அள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வந்த நிலையில், அவற்றினை மீள அள்ள வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சன் கடுமையான உத்தரவினை வலி. தெற்கு பிரதேச சபையினருக்கு பிறப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குப்பைகளை மீள அள்ளும் நடவடிக்கையில் வலி. தெற்கு பிரதேச சபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, வலி.வடக்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் மீள அள்ளப்பட வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்ட நிலையில், கழிவுகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.
மருத்துவ கழிவுகள் அகற்றல் பணி
குறித்த மருத்துவ கழிவுகள் அள்ளப்பட்டு விட்டதாக, வலி. வடக்கு பிரதேச சபை செயலாளர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்த நிலையில், சிறிதளவான கழிவுகளே அகற்றப்பட்டுள்ளதாகவும் பெருமளவான கழிவுகள் அகற்றப்படவில்லை என வலி. வடக்கு உறுப்பினர்கள், உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் நேற்றுமுன்தினம்(21.09.2026) கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், கொட்டப்பட்ட அனைத்து மருத்துவ கழிவுகளும் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் பின், அறிக்கை சமர்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு பணிப்புரையும் விடுக்கப்பட்டுள்ளது.
