வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் மூன்று மருந்துகளுக்கு தடை!
நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாடு இல்லாததன் காரணமாக 'ஸ்விஸ்காக்ஸ் 200(Swisscox 200)" என்ற வர்த்தக நாமத்தில் விற்பனையாகும் 'செலிகொக்சிப் 200 மில்லிகிராம் (Celecoxib 200 mg)" மருந்தின் மூன்று தொகுதிகளை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) மற்றும் மருந்துகள் வழங்கல் பிரிவு (MSD) வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவ வழங்கல் பிரிவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, தொகுதி எண்கள் 476CSX004, 476CSX005, 476CSX002 ஆகிய மூன்று தொகுதிகளையும் பயன்பாட்டில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மருந்து வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டவை
தேசிய மருந்து தர உறுதிப்பாட்டு ஆய்வகத்தின் அறிக்கைகளின் அடிப்படையில் “பாதுகாப்பு மற்றும் அபாய மதிப்பீட்டுக் உப குழு” கடந்த 17 ஆம் திகதி எடுத்த தீர்மானத்திற்கமைய தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைமை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் “ஸ்விஸ்காக்ஸ் 200 (Swisscox 200)” பயன்பாட்டிலிருந்து நீக்க அறிவுறுத்தப்பட்ட மூன்று தொகுதிகளும் மருத்துவ வழங்கல் பிரிவினால் விநியோகிக்கப்பட்டவை அல்ல என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தீர்மானம் குறித்து அனைத்து மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் போதனா மருத்துவமனை பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் பிரதானிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு சுகாதார அமைச்சின் செயலாளரின் 01/2021 அறிக்கைக்கமைவாகச் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.