ஊடக மற்றும் தகவல் விளங்கறிவை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் யாழ்.பல்கலைக்கழகம் கைச்சாத்து (Photos)
ஊடக மற்றும் தகவல் விளங்கறிவை(Media and Information Literacy) மேம்படுத்தும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக்கான மையமும் (Center for Media and Information Literacy) யாழ்.பல்கலைக்கழகமும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று(19) யாழ். பல்கலைக்கழக சபா மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக்கான மையத்தின் சார்பில் வைத்தியக் கலாநிதி எம். ஏ. வை. அரபாத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் கே. சுதாகர், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் சி. ரகுராம், கலைப்பீடப் பிரதிப் பதிவாளர் அனுஷா சிவனேஸ்வரன், ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் சுயாதீன ஊடக மற்றும் தகவல் விளங்கறிவு ஆலோசகர் கலாநிதி எம். சி.ரஸ்மின் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய கருத்துக்கள்
விழிப்புணர்வுடனான தகவல் நுகர்வின் அடிப்படையில் செம்மையான தகவல் பரிமாற்றத்துக்கு பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களைத் தயார்படுத்தும் செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அததுடன், இலங்கையில் தற்போது காணப்படும் ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக் கல்வியில் வெளித்தெரியும் இடைவெளிகளையும், குறைபாடுகளையும் ஆய்வு செய்யவும் இடமளிக்கப்படுள்ளது.
இந்த ஆய்வின் பேறாக, இலங்கைக்குப் பொருத்தமான ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக் கல்வி பற்றிய முன்மொழிவுகளும் வெளியிடப்படவுள்ளன.



