ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
தலைநகரில் 11 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை குறித்து மட்டக்களப்பில் நேற்று(12) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியின் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் ஏற்பாட்டிலே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஊடக அடக்கு முறையை உடனடியாக நிறுத்தக் கோரியும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது கூறப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்
இலங்கையில் தொடர்ச்சியாக மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கிக் கொண்டு வரும் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தாக்கப்படுகின்றமை இந்த அரசாங்கத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் இவ்வாறு ஒரு மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









