கொழும்பில் வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் திடீர் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, பல அரச நிறுவனங்கள் இணைந்து விசேட கூட்டுச் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளன.
இதன் ஆரம்பகட்ட ஆய்வில், நீர் வடிந்தோடும் பாதைகளில் அடைப்புகள் ஏற்பட்டுள்ள 60 இடங்கள் அவசர நடவடிக்கைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையின் கீழ் உள்ள
கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெல்லி பால்தசார் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோரின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நேற்று(08.11.2026) ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் கீழ் உள்ள ஐந்து தேர்தல் தொகுதிகளான வட கொழும்பு, கிழக்கு கொழும்பு, மேற்கு கொழும்பு, பொரளை மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பகுதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நாரஹேன்பிட்டி கிரிமண்டல மாவத்தை, பம்பலப்பிட்டி ஹைக் வீதி, வெள்ளவத்தை கொல்விங்வூட் பிளேஸ் மற்றும் பராகும் வீதி, கூரே நகர வீடமைப்புத் திட்டம், கிருலப்பனை ஸ்டாஃபர்ட் வீதி மற்றும் அதனுடன் இணைந்த கால்வாய் ஆகிய இடங்களில் ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன், பேஸ்லைன் வீதிக்கு அருகிலுள்ள ஹீன் எல, தெமட்டகொட ஆராமய வீதி, மத்திய கொழும்பின் புதிய பஜார் பகுதி, டி மெல் வத்த மற்றும் பெரடைஸ் வீதி ஆகிய இடங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நடவடிக்கையில் இலங்கை இராணுவம், கொழும்பு மாநகர சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்பு
தற்போதைய வடிகால் அடைப்புகளை அகற்றுவதுடன் மட்டும் இந்த வேலைத்திட்டம் மட்டுப்படுத்தப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக நிலவி வரும் வடிகால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் பழுதுபார்ப்பு, தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பு ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
முன்னதாக, கடந்த நவம்பர் 6ஆம் திகதி பெய்த கடும் மழையினால் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்கள் பல மணிநேரம் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதுடன், கொழும்பு நகரம் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படுவதைக் குறைப்பதற்கான நீண்டகாலத் திட்டமொன்றை உருவாக்குவதும் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தக் களப்பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் வட்டகலவும் கலந்துகொண்டார்.