உப்புவெளி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.. மூன்று சந்தேகநபர்கள் கைது
திருகோணமலை, கப்பல்துறை சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 2ஆம் திகதி, வாடகை முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, நவம்பர் 6ஆம் திகதி திக்வெல்ல பகுதியில் மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், சம்பவம் தொடர்பில் நவம்பர் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஏனைய இருவரிடமிருந்து 32 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.

விசாரணைகளில், கொலைச் சதிக்கு உடந்தையாக இருந்தமை தெரியவந்ததையடுத்து அவர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24, 28 மற்றும் 34 வயதுடைய திக்வெல்ல மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரியாகச் செயற்பட்ட சந்தேகநபர் முன்னாள் இராணுவச் சிப்பாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.