இலங்கையின் மத்திய மலைநாட்டில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம்
இலங்கையின் மத்திய மலைநாட்டில் நில நடுக்கம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் அதுல சேனாரத்ன இந்த ஆபத்து தொடர்பான எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது.
மத்திய மலை நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதால், மத்திய மலைநாட்டில் நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொத்மலை, விக்டோரியா, போல்கொல்ல, ரந்தெனிகல,ரன்டெம்பே, போவததென்ன, காசல்கிரீ மற்றும் மாவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உச்ச எல்லையை அடைந்துள்ளதாகவும் சிலவற்றின் நீர் மட்டம் வான் கதவுகளை திறக்கும் நிலையை அண்மித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற அதிக மழைவீழ்ச்சிக்குப் பிறகு குறுகிய காலத்தில் மத்திய மலைநாட்டின் தியதலாவ, பல்லேகெல்லைப் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு நில அதிர்வு நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்த்தேக்கங்களில் நீர் நீண்ட காலம் தேங்கி இருக்கும் போது , நிலத்திலுள்ள பாறை அடுக்குகள் அழுத்தத்திற்குள்ளாகும் ஆபத்துகள் ஏற்படக்கூடும் எனவும் அதனால் நில அதிர்வுகள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.