நோர்வே, நெதர்லாந்து இலங்கை தூதுவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் விசேட சந்திப்பு
இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் ட்ரைன் ஜரான்லி எஸ்கெடல் (Ambassador Trine Jovani Eskedal) மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் (Tanja Gonfgrijp) ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan) சந்தித்துப் பேசியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று நண்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தை எதிர்காலத்தில் முன்னேற்றும் செயல்பாடுகளில் முதன்மையான தகவல் தொழிநுட்பத்துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் காணி அபகரித்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், இதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணமும் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சாணக்கியன் விசேட கோரிக்கை ஒன்றினையும் முன்மொழிந்திருந்தார்.
குறிப்பாகத் தொல்பொருள் எனும் பெயரில் காணிகள் சூறையாடப்படுவதை தடுக்கும் நோக்குடன் தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதன்மூலம் நாம் எதிர்கொள்ளும் சட்ட விரோத காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்றைய குறித்த சந்திப்பானது சமகால அரசியல் பரிமாற்றத்துடன் முற்றுப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த இரு நாட்டுத் தூதுவர்களுடன் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்கள் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள், மாவட்ட மக்களுக்குத் தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராமிய மட்ட உட்கட்டமைப்பு விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளன.
சர்வதேச ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒரு அழுத்தத்தினைக் கொடுத்து இலங்கையை பேச்சுவார்த்தை மேசைக்கு எடுத்து தமிழர்களுக்குரிய தீர்வைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தூதுவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
சந்திப்பினை தொடர்ந்து நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாநகரசபை முதல்வர்,
வருகை தந்த நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்களிடம் மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும், அரசியல் ரீதியில் மாநகரசபையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் எவ்வாறு தடைப்படுகின்றது என்பது தொடர்பிலும் கலந்துரையாடினோம்.
அத்துடன் மாநகரசபையூடாக இரண்டு திட்டங்கள் தூதுவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன. நெதர்லாந்து தூதுவரிடம் ஆற்றினை ஆளப்படுத்தவதற்கான இயந்திர விடயமும், நோர்வே சிநேக பாலமொன்று காந்திப்பூங்காவில் இருந்து பொதுச்சந்தைக்குச் செல்லும் வகையிலான பாலமொன்றுக்கான திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் பல்வேறு தூதுவர்களிடமிருந்து நிதிகள் பெற்றுக் கொடுத்தாலும் இங்குள்ள நிருவாகத் திறமையின்மை காரணமாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திகளைச் செய்து விடக் கூடாது என்ற காரணத்திற்காகவும் எம்மால் கொண்டுவரப்படும் நிதிகள் சரியான முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்தப்படவில்லை.
இதே போன்று ஜப்பான் தூதுவரின் வருகையின் போது இவ்வாறான திட்டங்களைக் கொடுத்து அதன்மூலம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், பதினொரு மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் அந்த வேலை முடிக்கப்படவில்லை. இவ்வாறான நிலைமையே எமது மாநகரசபையில் இருக்கின்றது.
மேலும், அரசியல் ரீதியில் 13வது திருத்தச்சட்ட அமுலாக்கம், மட்டக்களப்பின் பரம்பல் நிலையை மாற்றியமைப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற குடியேற்றத் திட்டங்களான மாதவணை, மயிலத்தமடு, கெவிலியாமடு தற்போது எதிர்வரும் 21ம் திகதி குடியேற்றத் திட்டமிடப்பட்டிருக்கின்ற காரமுனை போன்ற விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் கலந்துரையாடியிருந்தோம்.
சர்வதேச ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒரு அழுத்தத்தினைக் கொடுத்து இலங்கையைப் பேச்சுவார்த்தை மேசைக்கு எடுத்து தமிழர்களுக்குரிய தீர்வைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
அதேநேரம் பொதுமக்களிடம் இருந்து மறைமுக வரி அதிகமாக அறவிடப்படுகின்றது, முப்பது நாற்பது வீதத்திற்கு அதிகமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமை, இவற்றைக் கட்டப்படுத்தும் தந்திரோபாயங்கள் இந்த அரசாங்கத்திடம் இல்லை, ஆளுங்கட்சியில் இருப்பவர்களும் அதற்குரிய அழுத்தங்களைக் கொடுப்பதில்லை என்பது தொடர்பிலும் பேசப்பட்டது.
மேலும் மட்டக்களப்பின் வளங்கள் பறிபோவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மட்டக்களப்பின் மண்வளம் சுரண்டப்படுதல் மற்றும் மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கின்ற விடயங்கள் தொடர்பிலும் அவர்களுடன் கலந்துரையாடினோம்.
மேலும் மிக முக்கிய விடயமாக நாங்கள் அரசியற் தீர்வை நோக்கி நகரும் இத்தறுவாயில் எமக்கான அரசியற் தீர்வு கிடைப்பதற்கிடையில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற 2020 - 2030ம் ஆண்டு மற்றும் 2050ம் ஆண்டு திட்டங்களை நிறுத்தாவிடின் எமக்கான அரசியற் தீர்வு கிடைக்கும் போது இங்கு தமிழர்களுக்கு என்று இடம் இருக்காது.
முதலில் அவ்வாறான திட்டங்கள் அமுல்ப்படுத்துவதனை நிறுத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதோடு, எமது அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களும் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.
மிகவும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலாக இது இருந்தது. எதிர்காலத்தில் மேற்கூறப்பட்ட திட்ட அமுலாக்களின் மூலம் இந்த உறவைத் தொடர முடியும் என நான் நினைக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி...
நோர்வே, நெதர்லாந்து மற்றும் இலங்கை தூதுவர்களுடன் இராஜாங்க அமைச்சர் சந்திப்பு







ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
