விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்த போது இல்லாத நிலை! காலம் கடந்தும் நெஞ்சை ரணமாக்கும் பதிவுகள்
ஆயிரக்கணக்கானோரின் உடல்களில் இருந்து உயிர்களை பிரித்து, இரத்தத்தை பிழிந்து நரவேட்டையாடிய 30 வருடகால போரின் இறுதி நாட்கள் மிகவும் கோரமானவை.
நெருங்குகிறது மே 18! நினைவிருக்கிறதா 14 ஆண்டுகளுக்கு முன்பு பசுமையான முள்ளிவாய்க்கால் மண்ணானது மக்களின் இரத்தத்தில் தோய்ந்த காட்சிகள்?
விண்ணைப் பிளக்கும் குண்டுத்தாக்குதல்களின் சத்தங்களும், காதை கிழிக்கும் மரண ஓலங்களும் எத்தனையெத்தனை ஆண்டுகளானாலும் முள்ளிவாய்க்கால் காற்றில் கலந்தே இருக்கும்.
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால்
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியானது குறிப்பிட்டு சொல்லக்கூடிய முக்கிய இடத்தை பிடிக்கிறது.
மிகவும் கொடூரமாக முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
வட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்த அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள், இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்.
இப்படியான வாகனங்களுக்கு கீழ், பதுங்கு குழிகளை அமைத்து தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் முயன்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பலரும் தமது அனுபவத்தை பகிர்கின்றனர்.
அலைகடலென திரண்டிருந்த மக்களுக்குள் விழுந்து வெடித்து சிதறியுள்ளன செல்கள். ஒரு வினாடிக்கு முன் அருகில் உயிருடன் நின்றிருந்தவர் அடுத்த கனமே உடலில் இருந்து இரத்தம் வழிந்தோட அவயவங்கள் சிதறி கிடந்த போது அவர்கள் மீது ஏறியோடி உயிர்த்தப்ப மேற்கொண்ட முயற்சிகளை பகிரும் பலரும் அடி நெஞ்சில் பதிந்திருக்கும் ரணத்தை கண்ணீராக வடிக்கின்றனர்.
இப்படி பார்ப்பதானால் முள்ளிவாய்க்கால் மண்ணின் நேரடி சாட்சியாக நிற்கும் பலரின் உணர்வுகள் எமக்கு காட்டி நிற்பது அவர்கள் மனதில் ஆறாமல் இருக்கும் காயங்களையே..!
வரப்போகும் நினைவேந்தலின் செய்தி
இதெல்லாம் ஒரு புறம் இருக்க எதிர்வரும் சில தினங்களில் வரப்போகும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் எமக்கு காட்டி நிற்பது என்ன?
இறுதி யுத்தம் முடிந்த ஒரு சில வருடங்கள் துப்பாக்கி தாங்கிய இராணுவத்தின் பார்வை வட்டத்திற்குள் அச்சத்திற்கு மத்தியில் நினைவேந்தப்பட்ட மே 18இற்கான வரலாறே இருக்கின்றன.
இதனை அடுத்து புலனாய்வாளர்களின் நெருக்கடி, நீதிமன்ற அழைப்பாணைகள், பல்வேறு அச்சுறுத்தல்கள் என இந்த நினைவேந்தல்கள் வருடாந்தம் கடந்து வந்த கதை, கோவிட் தொற்று இலங்கையில் ஏற்பட்ட காலப்பகுதியில் சமூக இடைவெளி உள்ளிட்ட காரணங்களை கொண்டு நினைவேந்தல்கள் தடுக்கப்பட்டு, தடை செய்யப்பட்டு வந்த சம்பவங்களையும் யாரும் மறுப்பதற்கில்லை.
என்ற போதும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இறுதிப்போரில் உயிர்நீத்தோரை நினைவுகூர தடபுடலான ஏற்பாடுகள் சுமார் ஓரிரு கிழமைகளுக்கு முன்னதாகவே ஆரம்பமாகி யுத்த வரலாற்றை மனதிற்குள் அசைபோடச் செய்யும்.
ஆனால்....! இன்று ஆரவாரமற்ற, அரசியல் மிரட்சிப் பேச்சுக்களும், அரசியல் இலாபமும் இல்லாத ஏதோவொரு அமைதி, நினைவேந்தல் நிகழ்வினை ஆட்கொண்டுள்ளது போன்றுள்ளதாக கூறுகின்றனர் சமூக அவதானிகள்.
ஏன் அரசியல் இலாபமற்று போனதா மே 18, இல்லையெனில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை உண்மையில் உணர்ந்தனரா அரசியல்வாதிகள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழாமலும் இல்லை.
மனம் திறக்கும் மக்கள்
இது தொடர்பில் முள்ளிவாய்க்கால் மக்களின் மனதை அறிந்து கொள்ள களமிறங்கிய லங்காசிறியுடன் மனதை திறந்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டனர் பொது மக்கள்.
அவர்கள் கூறுகையில், “யாரும் அரசியலுக்காக மே 18ஐ செய்து போகலாம் ஆனால் எங்களது உணர்வுகள் வேறு, நாங்கள் இழப்புக்களையும் வலிகளையும் நேரடியாக சுமந்தவர்கள். புகழுக்கும், பெயருக்கும் மே 18ஐ செய்யவில்லை. எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு நாளாகவே இந்த மே 18 அமைந்துள்ளது.
எங்களுக்கு நடந்த கொடுமைகள் போன்று இனி இந்த உலகத்தில் எந்த இனத்திற்கும் நடக்கக்கூடாது, இதைத்தான் நாங்கள் கேட்டு மன்றாடுகிறோம். 30 வருடங்களாக எங்களை பாதுகாத்து வந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்.
இப்போது இருக்கின்ற களவுகளோ, சமூக சீர்கேடுகளோ எதுவும் அப்போது இருந்ததாக இல்லை. ஆனால் இப்போது அவையெல்லாம் தலைவிரித்து தாண்டவம் ஆடுகின்றன. மே 18ஐ எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. அந்த நாட்கள் மிகவும் கொடுமையான நாட்கள்.
எல்லோரும் வீடுகளை கட்டி வாழ்ந்தாலும், வசதியாக வாழவில்லை. இன்னும் பலர் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றார்கள். அரசியலுக்காக யாரும் மே 18 நினைவேந்தலை கைவிட்டு போகலாம்.
இழப்புகளையும், வலிகளையும் நேரடியாக சுமந்தவர்களான நாங்கள் புகழுக்கும், பெயருக்குமாக மே 18 நினைவேந்தலை செய்யவில்லை என கண்களின் ஓரத்தில் கசியும் கண்ணீரை மறைத்தபடி, சொல்லி சொல்லி ஓய்ந்து போன தம் மன பாரத்தை இறக்கி வைக்கின்றனர்.
பதிவாகப் போகும் காட்சிகள்
இறுதிக்கட்டப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட, தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் இன்னமும் உறவுகளைத் தேடித்திரியும் உறவினர்கள் மே மாதம் 18ஆம் திகதி நினைவுத்தூபிக்கு முன்பாக வந்து தங்களது உறவுகளை நினைத்தபடி முள்ளிவாய்க்கால் நிலத்தை கண்ணீரால் நனைத்தபடி கதறியழும் காட்சிகள் ஒவ்வொரு வருடமும் பதிவாகப் போகும் காட்சிகள் தான்.
ஆடம்பரமாக ஆரவாரமாக நிகழ்வுகளை முன்னெடுத்தாலும் சரி, மக்களின் ரணங்களை கொண்டு இலாபம் தேடியவர்கள் ஒதுங்கிக் கொள்ள நிர்க்கதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் வலிகளை புரிந்து கொண்ட மக்களும் மாத்திரம் இணைந்து நினைவேந்தினாலும் சரி இழந்தவர்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என முற்றுப் புள்ளி வைக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.



