மாவை சேனாதிராஜாவின் பாதையில் செல்வதற்கு தயார்: சிறிநேசன்
மாவை சேனாதிராஜா மறைந்தாலும் அவர் சென்ற இலட்சியப்பாதையில் தாமும் செல்வதற்கு தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்(Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
சலுகைக்காவும் இலாபத்திற்காகவும் உணர்வினை விற்பதற்கோ, ஒட்டுமொத்த தமிழ் தேசிய அரசியலிலிருந்து விலகவோ விரும்பவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
அமரத்துவமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சி மூத்த தலைவர் அமரர் மாவைசேனாதிராஜாவின் ஆத்ம சாந்தி வேண்டி சித்தாண்டி இலங்கைத் தமிழரசு கட்சியின் வட்டார கிளை ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மௌன அஞ்சலி
அமரர் மாவை சேனாதிராஜாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு , ஆத்மசாந்தி வேண்டி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது கட்சியின் ஆதரவாளர்களால் இரங்கல் உரையும் ஆற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் , மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனி தலைவர் கே.சோபனன் சித்தாண்டி இலங்கைத் தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |