கந்தளாய் விவசாயிகளின் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் : பிரதேச செயலகத்தில் மனு கையளிப்பு
பொருட்களின் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கும், உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, கந்தளாய் பிரதேச விவசாயிகள் இன்று(16) மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கந்தளாய் விவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கை
கந்தளாய் பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணித்து கந்தளாய் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
விவசாயிகளின் நெல்லுக்கு உடனடி மற்றும் நியாயமான உத்தரவாத விலையை வழங்க வேண்டும். அதிகரித்து வரும் விவசாய இடுபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் நிலையான தீர்வை முன்வைக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், "எங்கள் வியர்வைக்கு விலையில்லையா?", "விவசாயிகளை நடுத்தெருவில் விடாதே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் சுவரொட்டிகளையும் ஏந்தியவாறு அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
பேரணியின் இறுதியில், தங்களது கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றினையும் விவசாயிகள் கந்தளாய் பிரதேச செயலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதிகாரிகளிடம் கோரிக்கை ஆவணத்தை கையளித்த பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர். தமக்கான உரிய தீர்வு எட்டப்படாவிடின், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் விவசாயிகள் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.