திலீபன் சிலையை உடனடியாக நிறுவக் கோரி மட்டக்களப்பில் அரசியல் தலைமைகள் பங்கேற்பில் மாபெரும் போராட்டம்
யாழ்ப்பாணம் - நல்லூரில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டதை கண்டித்தும் தமிழர்களின் நினைவேந்தல் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டமானது நேற்று(28.09.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, "திலீபன் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்", "சிலையை அகற்றுவது அடிப்படை உரிமை மீறலாகும்", "நினைவுகளை அழிக்காதே, நினைவு கூறும் உரிமையை மறுக்காதே" போன்ற கோஷங்கள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு போராட்டக்காரர்கள் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
போராட்டக்காரர்களின் கோரிக்கை
மேலும், "சிலையகற்றும் செயல் அல்ல் தமிழ் மக்களின் உரிமையை மதிப்பதே உண்மையான நல்லிணக்கம்" என்றும், "ஒரே நாடு ஒரே சட்டம் எனின் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும்" என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகளும் பண்பாட்டுச் சுதந்திரமும் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதாகவும், அகற்றப்பட்ட திலீபனின் சிலையை உடனடியாக மீண்டும் அதே இடத்தில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், பிரதேச சபையின் தவிசாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஸ், சிவில் சமூக செயற்பாட்டாளர்களான எஸ்.சிவயோகநாதன், அருட்தந்தை லூக் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.



