வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பணிப்பெண்கள் விவகாரத்தில் பாரிய மோசடி! கோப் குழுவில் அம்பலம்
வீட்டு வேலைக்காக முதன்முறையாக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு கட்டாய குடியிருப்பு பயிற்சி வழங்கத் தவறியதால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ரூ.631,177,650 பயிற்சி வருவாயை இழந்துள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் (COPE) தெரியவந்துள்ளது.
பயிற்சி இல்லாமல் 28,165 வீட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தற்போதைய செயல்திறன் குறித்த கோப் குழு கூட்டத்தில் இந்த விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
83 சிறுவர்கள்
மேலும், மே 2023 முதல் ஜூன் 2024 வரை 83 சிறுவர்கள் வீட்டு சேவைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்ற ஒரு உண்மை இதன்போது வெளிப்பட்டதாக குழு அங்கத்தவர்களால் கூறப்படுகிறது.
அத்தோடு வேலைவாய்பு விவகாரம் அதன் ஒழுங்குமுறைப் பாத்திரத்திற்கு வெளியே வணிக ரீதியாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
முந்தைய அரசாங்கத்தின் போது செயல்படுத்தப்பட்ட "ஜெயகமு இலங்கை" திட்டத்திற்காக 12 பில்லியன் செலவு செய்யப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.
இந்த சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்பு துணைக் குழுவை நியமிக்க பரிந்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.




