வெளிநாடொன்றில் ஏற்பட்டுள்ள கொடிய நோய்.. பலியானோரின் எண்ணிக்கை 4,000ஐத் தாண்டியது
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000 ஐக் கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது கொங்கோ வரலாற்றில் பதிவான மிக மோசமான எபோலா நோய்த்தொற்று அனர்த்தமாகக் கருதப்படுகிறது. வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, நாட்டின் ஏழு மாகாணங்களில் 8,300 இற்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,018 ஆக அதிகரித்துள்ளது.
இந்நோயைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், பல்வேறு இடையூறுகள் காரணமாக நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன.
நவீன உள்கட்டமைப்பு வசதிகளின்மை, கிழக்குப் பிராந்தியங்களின் புவியியல் அமைவிடம் மற்றும் ஆயுதமேந்திய குழுக்களின் அச்சுறுத்தல்கள் என்பன சுகாதாரப் பணியாளர்களின் உடனடி நடவடிக்கைகளுக்குப் பெரும் தடையாக அமைந்துள்ளன.
சிகிச்சை நடவடிக்கைகள்
அத்துடன், இத்தூரி (Ituri) மாகாணத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான இடைத்தங்கல் முகாமொன்று இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கையின் போது தீப்பிடித்து எாிந்து சாம்பலாகியுள்ளது.

இதனால் அங்கு தங்கியிருந்த சுமார் 19,000 பேர் பாதுகாப்பான இடங்களைத் தேடித் தப்பியோடியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையின்மை மற்றும் ஆத்திரம் என்பனவும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பாதித்துள்ளன.
அண்மையில் எபோலா விழிப்புணர்வு வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர், பட்ஸெம்போ பகுதியில் வைத்துப் பொதுமக்கள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தற்போதைய அனர்த்தத்திற்குக் காரணமான 'புண்டிபுக்யோ' வைரஸ் வகைக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல பரிசோதனை முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலக சுகாதார நிறுவனம் நிலைமை குறித்து எச்சரிக்கை விடுக்கையில், கொங்கோவில் எபோலா பரவல் இன்னும் தணியவில்லை என்றும், நிலைமை தீவிரமடைந்தால் இது ஆபிரிக்க பிராந்தியத்தில் இடம்பெற்ற மிக மோசமான பேரழிவாக மாறக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.