கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி
புதிய இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியின் மீது மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்களால் காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பொது நூலகத்திற்கு அருகில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொலிஸார் நடத்திய நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளால் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்ஜித் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், ஹர்ஷன ராஜகருணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இரண்டாம் இணைப்பு
இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு மாநகர சபையை அண்மித்துள்ள பல பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பில் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோருக்கு எதிராக நீதவான் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் பொது மையவாடி தொடக்கம் பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை, ஜும்மா சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வரையான பகுதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட தடை விதித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
கொழும்பு ஹைட் பார்க் மைதானம் மற்றும் பஞ்சிகாவத்தையில் இன்று(30) பிற்பகல் 1.30 க்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் பல செயற்பாடுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு போன்றவற்றை மையப்படுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (30.1.2024) பகல் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தையடுத்து நீதிமன்றத்தால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |