நாடாளுமன்ற உறுப்பினருக்கு துப்பாக்கி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை பயங்கரவாதமாகும்: அருட்தந்தை மா.சத்திவேல்
நாடாளுமன்ற உறுப்பினருக்கு துப்பாக்கியால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை அரச பயங்கரவாதத்தினையே வெளிப்படுத்துகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (03.06.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொது விளையாட்டரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நடத்திய விளையாட்டு வீரர்களுடனான சந்திப்பின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய புலனாய்வு பிரிவினர் என அடையாளப்படுத்தப்பட்டவர்களால் நாடாளுமன்ற உறுப்பினருடைய சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதோடு சுதந்திர நடமாட்டத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொது எதிர்ப்பு
அத்தோடு மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி துப்பாக்கியை காட்டி கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையானது அரச பயங்கரவாதத்தின் மிருகத்தன்மை வெளிப்படுத்துகின்றது. இதனை வன்மையாக கண்டிப்பதோடு கட்சி வேறுபாட்டிற்கு அப்பால் வடக்கு கிழக்கு மக்கள் பொது எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுதந்திரமாக மக்களை சந்திக்க முடியாது எனில் சாதாரண பொதுமக்கள் எவ்வாறான அரச பயங்கரவாதத்தின் பிடிக்குள்ளும், பயத்துக்குள்ளும் வைக்கப்பட்டுள்ளனர் என்பது புலனாகின்றது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை மண்டியிட செய்து நெற்றியில் துப்பாக்கி வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதந்திரமாக நடமாடியதோடு அமைச்சராகவும் தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தார்.
தற்போது பொலிஸ் அதிகாரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருப்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத சுதந்திர அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது.
உடனடி ஒழுங்கு
மருதங்கேணியில் நடந்த சம்பவம் ஒரு கட்சித் தலைவருக்கு அல்லது தனி ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நிகழ்ந்த சம்பவமாக கருதி ஏனைய கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைதி காக்க கூடாது.
அத்தோடு ஊடகங்களுக்கு அறிக்கை கொடுப்பதும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை தெரிவிப்பதுமான செயற்பாட்டுக்கு மட்டுபடுத்தி விடக்கூடாது. இதுவே ஏனையவர்களுக்கும் நிகழலாம்.
ஆதலால் வடகிழக்கு தழுவிய பொது எதிர்ப்பினை கட்சி வேறுபாடிற்கு அப்பால் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை கட்சிகள் உடனடியாக ஒழுங்கு செய்தல் வேண்டும்.
எதிர்கால விளைவுகள்
இல்லையே எதிர்காலத்தில் பாரிய விளைவுகளுக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தமிழர் பிரதேசத்தில் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பயத்தினை விதைத்து அடக்கி ஆள நினைப்பது பயங்கரவாதமே.
ஆதலால் கொலை அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் அதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு உரிமையை மீறியதோடு தாக்குதல் நடத்திய புலனாய்வு உறுப்பினர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்களையும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.
இதுவே நடந்த சம்பவத்திற்கான நீதி மட்டுமல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கௌரவமாகவும் அமையும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொது இடத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற பொலிஸ் அதிகாரியின் அடையாளத்தை வெளியிட வட இலங்கை பொலிஸ் மறுத்துவிட்டதாக ஜனநாயகத்துக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
