புவிசார் அரசியலில் புதிய யுகம் - ஐரோப்பாவுக்கு மார்கோ ரூபியோ எச்சரிக்கை
மியூனிக் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, புவிசார் அரசியலில் ஒரு 'புதிய யுகம்' தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கின் இறையாண்மைக்கு உட்பட்ட கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாக அறிவித்த பிறகு நடைபெறும் முதல் முக்கிய உலகளாவிய நிகழ்வு இதுவாகும்.
சீனாவுடனான பதற்றம் மற்றும் அணுசக்தி ஒப்பந்தம்
"உலகம் மிக வேகமாக மாறி வருகிறது; இந்த புதிய சூழலில் நமது பங்களிப்பு என்ன என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது" என்று ரூபியோ செய்தியாளர்களிடம் கூறினார்.

உக்ரைன் போர், சீனாவுடனான பதற்றம் மற்றும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் போன்றவை இந்த மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக உள்ளன.
அதேவேளையில், அமெரிக்காவின் பிடியிலிருந்து ஐரோப்பா சுதந்திரமாகச் செயல்படத் தயாராக வேண்டும் என்று பிரான்ஸ்ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
50 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு
இதற்கு இணையாக, ஜெர்மனி ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ், அமெரிக்காவுடனான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்ததோடு, பிரான்ஸுடன் இணைந்து ஐரோப்பாவிற்கென ஒரு கூட்டு அணுசக்தி தடுப்பு அரணை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நேட்டோ அமைப்பிற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், சுமார் 50 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாடு, அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலைச் சரிசெய்யுமா அல்லது ஐரோப்பாவின் தனித்துவமான பாதுகாப்புப் பாதையை வகுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.