மலையக மக்களின் காணி உரிமைக்கு சர்வதேச ஆதரவு: மனோ கணேசன் முக்கிய கலந்துரையாடல்
மலையக மக்களின் காணி உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் உடன், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மலையக சமூகத்தின் கௌரவம், பாதுகாப்பு, நீதி மற்றும் விட்டுக்கொடுக்க முடியாத அடித்தளமாக 'காணி உரிமைகள்' அமைய வேண்டும் என்பதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நிவாரண உதவிகள்
நிரந்தர வீட்டுவசதிகளைப் பெறுவதில் மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பாகுபாடுகள் குறித்தும், பிரான்ஸ் தூதுவரிடம், மனோ கணேசன் எடுத்துக் கூறியுள்ளார்.

இதன்போது, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாதுகாப்பான நிலம் மற்றும் நிலையான மீள்குடியேற்றத்தை வழங்கப்பட வேண்டும் பதிலாக, அவர்களை மீண்டும் மண்சரிவு அபாயம் உள்ள, உயர் ஆபத்துள்ள பகுதிகளுக்கே வலுக்கட்டாயமாக அனுப்பும் செயற்பாடுகள் கவலையளிக்கும் நடைமுறை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தலைமுறைகளாகக் கட்டமைப்பு ரீதியான அநீதிகளைச் சுமந்து வரும் சமூகங்களுக்கு, மீட்பு முயற்சிகள் என்பது வெறுமனே வீடுகளைக் கட்டியெழுப்புவது மட்டுமல்லாது அந்த மக்களின் இழந்த கௌரவம், பாதுகாப்பு மற்றும் நீண்டகால நீதியை மீட்டெடுப்பதே என்பதை உறுதிப்படுத்துவதில் சர்வதேச பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை இந்த கலந்துரையாடல் மீண்டும் உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதே வேளை, முன்னணி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகிய பிரான்ஸ், மலையக தமிழ் சமூகத்தின் காணி, வீட்டு உரிமைகள், இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜிஎஸ்பி வரிச்சலுகைகளுக்கான நிபந்தனைகளாக முன்வைக்க பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
