பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் நேர்மையான செயல்! (Photos)
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, தள்ளாடி பகுதியில் உள்ள வீதியில் பணம் உட்பட ஆவணங்களுடன் கண்டெடுத்த பணப்பையை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உரியவரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தனது நேர்மையை காண்பித்த சம்பவம் மன்னாரில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் தள்ளாடி வீதியில் நேற்று (24.10.2022) பொலிஸ் உத்தியோகத்தர் சமிந்த திலக்குமார ( இல. பி.எஸ். 57943) என்பவர் பணப்பை ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
பணப்பையில் இருந்தவை
அவ் பணப்பையில் பத்தாயிரம் ரூபாவும், 2 மோட்டார் சைக்கிள் ஆவணங்களும், அடையாள
அட்டை, ஏ.ரி.எம் காட், பெட்ரோல் காட் என்பன காணப்பட்டுள்ளது.
இவற்றை பொலிஸ் பொறுப்பதிகாரி இடம் ஒப்படைக்கப்பட்டு அவ் பணப்பைக்குள் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ் பணப்பையை தொலைத்தவர் மன்னாரில் ஒரு பிரபல பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவன் என்றும் அவர் மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த சிவசம்பு வர்மியன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உரியவரிடம் கையளிப்பு
பின் இவர் மன்னார் பொலிஸ் பகுதிக்கு அழைக்கப்பட்டு பணப்பை சரி பார்க்கப்பட்டு மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் மஸ்இம்புள்ள முன்னிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உரியவரிடம் ஒப்படைக்கபட்டது.
இவ் பொருளை கண்டெடுத்த பொலிஸ் உத்தியோகத்தரை அதிகாரிகள், உரிமையாளரும்
பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



