மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மன்னார் மாவட்டத்தின் இந்த வருடத்திற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது இன்று (16.02.2024)காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கே.கே.காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்
இதன் போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் ஒதுக்கீடுகள் குறித்து ஆராயப்பட்டதோடு பல்வேறு திட்டங்கள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டதோடு, மன்னார் மாவட்ட ரீதியாக கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் காணி
அபகரிப்பு, காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக
நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று
வருவதாகவும், இதற்கு மாவட்டத்தில் உள்ள உரிய திணைக்கள அதிகாரிகள் துணை போவதாக
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் பகிரங்கமாக
குற்றம் சாட்டியுள்ளார்.
துரித நடவடிக்கைகள்
எனினும் இவ்விடயம் தொடர்பாக மக்களை பாதிக்கும் திட்டங்கள் குறித்து துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கே.கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வன வள மற்றும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மக்களின் காணிகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.திலீபன், வடமாகாண ஆளுநர். பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புக்கள், படை உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |