மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 14 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்: வைத்தியர் ரி.வினோதன் (Video)
மன்னார் மாவட்டத்தில் இம்மாதம் 22 நாட்களில் 488 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அங்கு தற்போது வரை 3672 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 14 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து பெப்ரவரி மாதம் தொடக்கம் தற்போது வரை 488 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் 2022ஆம் ஆண்டு 689 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 3672 கோவிட் தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மொத்தம் 39 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடம் ஜூலை மாதத்தின் பின்னர் டெல்டா பிறழ்வு மேலோங்கிய சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு நூறு தொற்றாளர்களுக்கும் 1.1 என்ற வீதத்தில் மரணங்கள் பதிவாகியிருந்தன.
எவ்வாறாயினும் இவ்வருடம் ஜனவரி மத்திய பகுதியின் பின்னர் ஒமிக்ரோன் பிறழ்வு மேலோங்கியதன் பின்னர் ஒவ்வொரு நூறு தொற்றாளர்களுக்கும் 6 பேர் மரணம் ஆகும் சந்தர்ப்பமாக இது குறைவடைந்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்றினால் மாவட்டத்தில் 3 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து, மேலதிக வலுவூட்டல் தடுப்பூசிகளை பெற்று தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 2வது தடுப்பூசியை பெற்றவர்களில் சுமார் 55.5 சதவீதமானவர்கள் மேலதிக வலுவூட்டல் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
மேலதிக வலுவூட்டல் தடுப்பூசியை 70 தொடக்கம், 75 சதவீதமானவர்கள் செலுத்திக் கொண்டால் மாத்திரமே குறித்த தொற்றின் சங்கிலியை நாங்கள் முற்றாக முறியடிக்க முடியும்.
எனவே மக்கள் மூன்றாவது மேலதிக வலுவூட்டல் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பாடசாலை மாணவர்களில் இதுவரை 12,649 பேர் தமது முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்கள். 16 தொடக்கம் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 2வது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.
தற்போது வரை மொத்தமாக 1,649 பேர் தமது 2 வது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி மகா சிவராத்திரி நிகழ்வுகள் மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இடம்பெற உள்ளது.
இதற்காக வருகை தர உள்ள பக்தர்கள் கட்டாயம் பூரணமாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். பூரணமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒருவர் தனது 2வது தடுப்பூசியை பெற்று 2 வாரங்கள் கழிந்திருக்க வேண்டும்.
அத்தோடு மூன்று மாதங்களுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தனது 2வது தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்களுக்கு மேற்பட்டிருந்தால் கட்டாயம் மூன்றாவது அல்லது மேலதிக வலுவூட்டல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான பக்தர்களே குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள
அனுமதிக்கப்படுவார்கள். எனவே திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பூரணமான
தடுப்பூசியை பெற்றுக் கொள்ள விரும்பினால் உடனடியாக அதனை பெற்றுக் கொள்ள
வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



