மன்னார் மாவட்டத்தில் 24 நாட்களில் 82 தொற்றாளர்கள்
மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 23 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்தில் 80 தொற்றாளர்கள் சிகிச்சை பெறுவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் கிடைக்கப்பெற்ற பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 23 பேருக்கு கோவிட் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் ஏற்கனவே கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனவும் ஏனையவர்கள் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களாகவும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களாகவும் பணிப்புரிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
குறித்த தொற்றாளர்களுடன் இம்மாதம் மாத்திரம் 82 கோவிட் தொற்றாளர்களும், தற்போதுவரை மொத்தமாக 442 தொற்றாளர்கள் என்றவகையில், இவ்வருடத்தில் 425 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை தற்போது வரை இம்மாதத்தில் இரண்டாயிரத்து 72 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இவற்றில் 412 பி. சீ. ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி பகுதியில் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்ட பெண்களுக்கான கோவிட் இடை நிலை சிகிச்சை நிலையத்தில் தற்போது வரை 80 கோவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் மன்னார், வவுனியா மற்றும் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வார இறுதியில் சிகிச்சை நிறைவுற்று வீடு திரும்ப உள்ளனர் எனவும் கூறினார்.
அதேபோன்று நாளை பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்காக வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் செல்லுமாறும், தேவையின்றி வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.