மன்னார் நீதிமன்று மீதான தாக்குதல்: பிற்போடப்பட்டுள்ள தீர்ப்பு
கடந்த 2013ஆம் ஆண்டு மன்னார் (Mannar) நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்தமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜுலை மாதம் 18ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது, கடந்த 11 வருடங்களாக நடைபெற்று தற்போது விசாரணைகள் யாவும் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் (06.06.2024) தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பிலான சாட்சியங்கள் யாவும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்து ஒரு மாத காலத்திற்குள் எதிர் தரப்பு சாட்சியங்களுக்காக தவணை வழங்கப்பட்டது.
வழக்கு விசாரணை
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட போது, எதிர் தரப்பினர் சார்பில் சட்டத்தரணி குணைஸ் பாருக்கும், மன்றில் சாட்சிகளின் நலனை பேணுவதற்காக சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும் கனிஷ்ட சட்டத்தரணி மகேந்திரன் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, வழக்கு தொடுநர் தரப்பினர், எழுத்து மூலமான சமர்ப்பணத்தை தாக்கல் செய்வதற்கு மேலதிகமான கால அவகாசத்தினை கோரியதன் காரணமாக இன்றையதினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்ட இந்த வழக்குஎதிர்வரும் ஜுலை மாதம் 18ஆம் திகதிக்கு தள்ளிபோடப்பட்டுள்ளது.
அதேவேளை, வழக்கு தொடடுநர் தரப்பு எதிர்வரும் ஆறாம் மாதம் இருபதாம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமான சமர்ப்பணத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு தொடுநர் தரப்பிலான சாட்சியங்கள் யாவும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்து ஒரு மாத காலத்திற்குள் எதிர் தரப்பு சாட்சியங்களுக்காக தவணை வழங்கப்பட்ட நிலையில் எதிர் தரப்பில் 50 பேரின் கூண்டுக்கூற்றுக்களும் இருவரின் சாட்சியமும் ஒரே நாளிலேயே பதிவு செய்யப்பட்டதோடு விளக்கமும் முடிவுறுத்தப்பட்டது.
நீதிமன்றின் தீர்ப்பு
அதேவேளை, கடந்த 2013ஆம் ஆண்டு மன்னார் நகரத்தை ஒட்டிய கோந்தைப்பிட்டி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கடற்றொழில் துறை பகுதியிலிருந்து போரின்போது இடம்பெயர்ந்து புத்தளம் பகுதிக்குச் சென்றிருந்த முஸ்லிம் கடற்றொழிலாளர்கள் திரும்பி வந்தபோது கோந்தைப்பிட்டி கடற்றொழில் துறையைத் தம்மிடம் முழுமையாக மீளத் தருமாறு கேட்டிருந்தனர்.
இதனையடுத்து, தமிழ் கடற்றொழிலாளர்களுக்கென மன்னாரின் இரண்டாம் கட்டைப் பகுதியில் வேறு இடம் நீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்டது.
ஆனால், அந்த இடத்திற்கு இன்னொரு முஸ்லிம் கடற்றொழிலாளர் ஒருவர் உரிமை கோரி தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் செய்ய தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த வழக்கு முடியும் வரையில் தமிழ் கடற்றொழிலாளர்களை கோந்தைப்பிட்டியிலேயே தொழில் செய்ய அனுமதிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தமிழ் கடற்றொழிலாளர்கள்
இருப்பினும், அந்த தீர்ப்பின் காரணமாக முஸ்லிம் கடற்றொழிலாளர்கள் கோந்தைப்பிட்டிக்குச் சென்று அங்கிருந்த தமிழ் கடற்றொழிலாளர்களின் மீன்வாடிகள், கடற்றொழில் படகுகள் ௭ன்பவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள்.
இதனையடுத்து, தமிழ் கடற்றொழிலாளர்களுக்கென மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அவர்களுக்குக் பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் 2012 ஜுலை 16ஆம் திகதியன்று நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை முஸ்லிம் கடற்றொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளாமல், தமிழ் கடற்றொழிலாளர்கள் உடனடியாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் ௭னக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமாத்திரமன்றி, பொலிஸார் மீதும், நீதிமன்றக் கட்டிடம் மற்றும் வாகனங்கள் மீது கற்களையும், கொட்டன்களையும் வீசி பெரும் தாக்குதலை மேற்கொண்டனர்.
குறித்த நீதிமன்று மீதான தாக்குதலின் போது மூன்று உயர் அதிகாரிகள் உட்பட ஆறு பொலிஸாரும், பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர்.
நடத்தப்பட்ட தாக்குதல்
மேலும், மன்னார் மேல் நீதிமன்றத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து அப்போது மன்னார் நீதவானாக கடமையாற்றிய நீதவான் ஏ.யூட்சனை அச்சமயத்தில் அமைச்சராக இருந்த ரிசாட் பதியுதீன் தொலைபேசியினூடாக அச்சுறுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து, இலங்கையின் வடக்கு பகுதிகளெங்கும் மன்னார் நீதவானை அச்சுறுத்திய அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்யவேண்டும் எனக்கோரி சட்டத்தரணிகள் போராட்டங்கள் பலவற்றையும் நடாத்தியிருந்தனர்.
இந்நிலையில்,12 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் விசாரணைகள் நிறைவுற்று இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில் வழக்கு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |