மாஞ்சோலை வைத்தியசாலையில் தொடரும் அசமந்தப்போக்கு
மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற இளைஞன் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம் (29.12.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இளைஞனின் சகோதரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
27 வயதுடைய எனது சகோதரர் வீதி விபத்தில் சிக்கியிருந்த நிலையில், மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூன்று மாதமாக கை முறிந்ததாக கூறி பீ.ஓ.பி போட்டிருந்தார்கள். ஆனால் கை முறியவில்லை கையிலிருந்து வரும் நரம்பு அறுந்திருந்தது. ஆனால் அதனை கண்டுபிடிக்க முடியாமல் முறிவென கூறி பீ.ஓ.பி போட்டிருந்தார்கள். அதனால் சகோதரரின் கை பாரிசவாதமாக வந்துவிட்டது.
வவுனியாவில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று எலும்பு முறிவு வைத்தியரிடம் காட்டிய போது வைத்தியர் பார்த்து விட்டு கூறினார். இது எலும்பு பிரச்சினை இல்லை. நரம்பு பிரச்சினை என. அப்போது இங்குள்ள வைத்தியருக்கு அது தெரியாது.
நீதி
தற்போது தம்பி வலது கையினால் சாப்பிட முடியாமல் ஒரு வாழ்க்கை இல்லாமல் இருக்கின்றார். திரும்ப நரம்பு வைத்தியரிடம் கொண்டு சென்று காட்டிய போது நாங்கள் கொண்டுவர தாமதமாகிவிட்டது எனவும் கழுத்திலிருந்து முழங்கை வரை வரும் நரம்பு அழுகிவிட்டது எனவும் கூறினார்.

அதனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற போது வைத்தியசாலை நிர்வாகம் கூப்பிட்டு கதைத்தது. ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று.
இந்த பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கேட்பது போல் எனது தம்பிக்கும் நீதி கேட்டே வந்திருக்கின்றேன். எனக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். இங்கே மாஞ்சோலை வைத்தியசாலைக்கு பிள்ளைகளை கொண்டுவர பயமாக இருக்கிறது என தெரிவித்தார்.