மனம்பேரிக்காக இந்தியா செல்ல மன்னாரில் ஒழுங்கு செய்யப்பட்ட படகு!
ஐஸ் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி, தலைமறைவாக இருந்த காலத்தில், மன்னாரில் உள்ள ஒரு கேரள கஞ்சா கடத்தல்காரரின் உதவியுடன் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இதற்கு வெளிநாட்டில் இருக்கும் 'தாரு' என்ற நபரின் உதவி அவருக்கு கிடைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
'பக்கோ சமன்' உடன் இருந்த பாணந்துறை நிலங்கவின் குழு, சம்பந்தப்பட்ட இரசாயனப் பொருட்களை நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் கந்தானை போன்ற பகுதிகளுக்கு பகுதிகளாகக் கொண்டு சென்றதாகவும் சந்தேக நபரின் வாக்குமூலங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 'கெஹல்பத்தர பத்மே' உள்ளிட்ட குழு இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் பயந்து போய் தனது சகோதரர் பியால் மனம்பேரியுடன் சேர்ந்து ரசாயனத்தைப் புதைத்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அழிக்கப்பட்ட தொலைபேசி
சிறிது காலம் தலைமறைவாக இருந்த சம்பத் மனம்பேரி, வலஸ்முல்ல நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் ஏழு நாள் தடுப்பு உத்தரவின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு மாற்றப்பட்டார்.
இதன்பின்னர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவால் நான்கு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அழிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடம் பற்றிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்களின்படி, T-56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தங்க முலாம் பூசப்பட்ட தோட்டா உறை, மேலும் 115 T-56 தோட்டாக்கள் மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியவை மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றப்பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் மனம்போரி வைத்திருந்த அழிக்கப்பட்ட தொலைபேசிக்கு பதிலாக அவர் பயன்படுத்திய மற்றொரு தொலைபேசியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அழிக்கப்பட்ட தொலைபேசியின் எண்ணைப் பயன்படுத்தி மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மனம்பேரி
இந்நிலையில் ஏழு நாள் தடுப்புக்காவல் காலம் முடிந்ததும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரியது.
இதன்படி பாதுகாப்பு அமைச்சர் கையொப்பமிட்ட தடுப்புக்காவல் உத்தரவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு, இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தற்போது கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனம்பேரி, மித்தெனியவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கொள்கலன்களிலும் ஐஸ் போதைப்பொருள் இருப்பது தனக்குத் தெரியாது என்று விசாரணையின் போது கூறியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்த 'பக்கோ சமன்' என்ற நபர், வாட்ஸ்அப்பில் தனக்கு அழைப்பு விடுத்து, துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட "வகை கல்" கொண்ட இரண்டு கொள்கலன்களையும் பெற்று மித்தெனியவிற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
அரசியல்வாதியின் நெருங்கிய சகா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை முன்பு அவரைக் கைது செய்தது.
இந்நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்டத்தில் ஒரு முக்கிய அரசியல்வாதியின் நெருங்கிய சகாவாகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
மேலும் கஞ்சா வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னதாக மித்தெனியவில் கொலை செய்யப்பட்ட கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் கொலை வழக்கில் தான் வழங்கிய துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகவும் சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



